குடிபோதையில் இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்த பெண்ணின் நீட் தேர்வு கனவு கனவாகவே நின்று போனது.
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அருகே 18 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்காக தயாராகி வந்து உள்ளார்.
இந்த நிலையில் தான், நேற்றைய தினம் அவரது அத்தை மகன்களான கோதண்டன் மற்றும் சென்னையில் 2 ஆம் நிலை காவலராக பணியாற்றி வரும் மோகன் குமார் ஆகியோர் இளம் பெண்ணின் வீட்டுக்கு வந்து உள்ளனர். இப்போது, குடி போதையில் வந்த இருவரும், இளம் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், வீட்டில் இருந்த இந்த இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோர் இளைஞர்கள் இருவரையும் தட்டிக்கேட்டு உள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் அவர்கள் இளம் பெண் உட்பட அனைவரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், காயமடைந்த இளம் பெண்ணும் அவரது தாயாரும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பேசிய இளம்பெண், “நீட் தேர்வுக்காக அரும்பாடுபட்டு படித்து வந்த நிலையில், கோதண்டன் மற்றும் மோகன் குமாரால், தனது டாக்டர் கனவு பாதிக்கப்பட்டதாக” வேதனையுடன் தெரிவித்தார்.
அத்துடன், “தாக்குதல் நடத்திய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், திருப்பத்தூரில் குடிபோதையில் இருவர் தகராறில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்துகொண்டதால், இளம்பெண் ஒருவர் நீட் தேர்வை எழுத முடியாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.