ஊருக்குள் புலி நடமாட்டம் இருப்பதால், ஊர் மக்கள் அனைவரும் பீதியில் ஆழந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை தலைக்குந்தா அருகே அமைந்து உள்ள சூழல் சுற்றுலா மையத்திற்கு சொந்தமான பைன் பாரஸ்ட் சுற்றுலா தளத்திற்கு கேரளா, கர்நாடகா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
அதே நேரத்தில், அந்த பகுதியில் குடியிருப்புகளும் உள்ளன. இந்த நிலையில், அண்மைக் காலமாக அப்பகுதியில் புலி ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன் சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்லக்கூடிய சாலையை ஒட்டி அமைந்து உள்ள வனப்பகுதிக்குள் புலி ஓய்வு எடுத்திருப்பதை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து உள்ளனர். இதனால், அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.
உடனடியாக, இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் சுற்றுலா மையத்தில் உலா வரும் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் சூழல் சுற்றுலா மையத்தில் புலி உலா வந்ததால் அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
அத்துடன், சூழல் சுற்றுலா மையத்தில் புலி உலாவரும் காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, வனத்துறை சார்பில் பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து, புலி பிடிபடும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடையும் அதிரடியாக விதிக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்றும் அதிரடியாக வனத்துறையினர் சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, புலியின் கால் தடங்களை வைத்து தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.