வட சென்னையின் தாதா சோமு துப்பாக்கி முனையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தலை முடி சிகை அலங்காரத்தை மாற்றி தலைமறைவாக இருந்தவர் சிக்கியது எப்படி? வாங்க பார்க்கலாம்…
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சோமு என்ற சோமசுந்தரம். அதிமுக முன்னாள் MLA எம். கே.பாலன் கொலை வழக்கில் சோமு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில், 16 பேருக்கு ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
இதன் காரணமாக, சோமு ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், பரோலில் வெளியே வந்த சோமு திடீரென்று தலைமறைவாகி விட்டார். கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சோமு, 2017 ஆம் ஆண்டு பரோலில் வந்து தலைமறைவானார்.
இதனையடுத்து, சிறை அதிகாரிகள் முறைப்படி வட சென்னையின் தாதா சோமு மீது புகார் அளித்தனர். இதற்கிடையில், எம்கேபி நகர் மற்றும் ஓட்டேரி காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் சோமுவுக்கு எதிராக மேலும் இரண்டு நீதிமன்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தன.
அத்துடன், நிலுவையில் உள்ள வாரண்டை நிறைவேற்ற, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் கே.முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து சோமுவை கைது செய்தார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சோமுவை, எம்.கே.பி.நகரில் உள்ள முல்லை நகர் பகுதியில் வைத்து கைது செய்தனர். சேரா அணியை சேர்ந்த சோமு சிறையில் இருந்தே ரவுடி கும்பலை இயக்கியவர். சிகை அலங்காரத்தை மாற்றி மாறுவேடத்தில் தலைமறைவாக சுற்றி திரிந்தவரை துப்பாக்கி முனையில் கைது செய்து உள்ளனர்.
உச்ச நீதிமன்ற ஆயுள் தண்டனை உறுதிப்படுத்திய நிலையில், சிறையிலே வாழ்க்கை போய்விடும் என்பதால், தலைமறைவானதாக கைதான சோமு வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக, வட சென்னையின் தாதா சோமு, பூட்டிய வீட்டிற்குள்ளே வாழ்க்கையை நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.