ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா இன்று (டிசம்.17) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. இதையடுத்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற மக்களவையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறைக்கான 2 மசோதாக்களை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதா வழிவகுக்கும்.
அதேநேரத்தில் யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதா வழிவகுக்கும். இந்த மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.