Mon. Dec 23rd, 2024

“அவன் இல்லாத வாழ்க்கை வேண்டாம்” ஆணவக்கொலையின் தொடர்ச்சியாக நடந்த மரணம்..!

By Aruvi Apr24,2024

“அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்” என்று, ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு 8 மணி அளவில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர், மர்ம நபர்களால் அதிரடியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் உயிரிழந்து கிடந்தது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “6 மாதங்களுக்கு முன் பிரவீன், ஷர்மிளா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதும், அவர் பட்டியலினத்தவர் என்பதால் அது பிடிக்காமல் ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை ஆணவப் படுகொலை செய்ததும்” தெரிய வந்தது.

இந்த கொலையில், ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் என்ற குட்டி அப்பு என்பவர் உள்ளிட்ட 5 பேரைக் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த விசயத்தால் கடும் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்கொலைக்கு முயன்றபோது, கழுத்துப் பகுதியில் இருந்த நரம்புகள் பாதிக்கப்பட்டதால் ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றார். இதனையடுத்து, அவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தான், ஷர்மிளா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதற்கு இடையில், கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக பள்ளிக்கரணை காவல் துறையினர் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து ஷர்மிளா குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கோமாவில் இருந்த அவர் தற்போது உயிரிழந்திருப்பது இந்த விவகாரத்தில் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன், ஷர்மிளா எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் ஒன்றும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த கடிதத்தில், “எனது மரணத்திற்கு துரை, சரளா, நரேஷ், தினேஷ் ஆகிய நான்கு பேர் மட்டுமே காரணம்” என்று, ஷர்மிளா சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “ஷர்மிளாவின் பெற்றோரான துரை, சரளா மற்றும் அவரது அண்ணன்களான நரேஷ், தினேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, பரபரப்யையும் கிளப்பி இருக்கிறது.

குறிப்பாக, மீண்டும் பரபரப்பாகும் பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கில், “அவன் இல்லாத Life எனக்கும் வேண்டாம். இந்த நாலு பேருதான் என் உயிர எங்கிட்ட இருந்து பறிச்சு என்ன வாழ விடாம பண்ணிட்டாங்க. என்னால அவன் இல்லாம இருக்க முடியல” என்று, மிக உருக்கமாக அந்த பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்று, தற்போது உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *