Mon. Dec 23rd, 2024

பணியிடங்களில் பாலியல் தொல்லையா?

By indiamediahouse Jun15,2024

“பணியிடங்களில் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அதற்கு மாறாக அங்கு பணியாற்றும் ஒட்டு மொத்த பெண்கள் மத்தியிலும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

நீலகிரி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய மோகனகிருஷ்ணனுக்கு எதிராக விசாகா குழுவில் புகார் ஒன்று அதிரடியாக அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய விசாகா குழுவினர், “சம்மந்தப்பட்ட மோகன கிருஷ்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், துறை ரீதியான விசாரணை முடியும் வரை அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தால் அவரை நீலகிரி மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்தில் பணியமர்த்த வேண்டும்” என்றும், பரிந்துரை செய்திருந்தது.

இதனை எதிர்த்து மோகனகிருஷ்ணன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, “பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது, நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுகமான சமூக பிரச்னையாகவும் இருப்பதாக” வேதனை தெரிவித்தார்.

அத்துடன், “பாலியல் தொல்லை, பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கச் செய்கிறது என்றும், இதன் காரணமாக பெண்கள் வேலையில் இருந்து விலகவும் தள்ளுகிறது” என்றும், கூறினார்.

மேலும், “பணியிடங்களில் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை என்றும், அங்கு பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, நிறுவனங்களின் பணி ஆற்றலை பாதிக்கச் செய்து, நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றும், கூறினார்.

குறிப்பாக, “இந்த வழக்கைப் பொறுத்தவரை, மோகனகிருஷ்ணன் தரப்பில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை எனக் கூறுவதால், இந்த விவகாரத்தை விசாகா குழு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு அளித்து, மீண்டும் முறையாக விசாரித்து அடுத்த 60 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் மோகனகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டு, 4 வாரங்களில் தண்டனை குறித்த முடிவை எடுக்க வேண்டும்” என்றும், அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *