சித்திரை பிறந்த கையோடு அரசியல் வெப்பமும் அதிகரித்து விட்டது. தேர்தல் அக்னி கொளுத்தப் போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் சித்திரை பலன்களை சற்று அலசிப் பார்ப்போம்..
திமுக
கிரகநிலை – ஆளுநருக்கு எதிரான வழக்கில் அபார வெற்றி. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எதிர்நடவடிக்கையில் தேசிய அளவில் கவனம் என்று ஒருபக்கம் கிராப் ஏறினாலும், மூத்த அமைச்சர்களின் ஓங்குதாங்கான பேச்சு, தோழமைக் கட்சிகளுக்குள் சிறு சுணக்கம் என்று மறுபக்கம் சறுக்கத்தான் செய்கிறது.
பலன்: துரைமுருகன், பொன்முடி, ரகுபதி, ராஜகண்ணப்பன், முத்துசாமி ஆகியோரை அமைச்சரவையில் இருந்து விடுவித்து இளம் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளித்து கட்சிக்கும் அந்தந்த மாவட்டத்திற்கும் புதிய ரத்தம் பாய்ச்சினால் ஒழிய குறிப்பிட்ட தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சற்று மங்கல்தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. இப்போது அமைச்சரவை மாற்றம் செய்வதால் ஒன்றும் தப்பில்லை. குறைந்தபட்சம் அந்தஅம்மா ஜெயலலிதா மாதிரி தடலாடியாக செய்கிறாரே என்று ஒரு நற்பெயர் தான் மு.க.ஸ்டாலினுக்கு வரும். அதேபோன்று இந்த தொங்குசதைகளை கழட்டி விட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் பாஜக, நாம் தமிழர், தவெக போன்ற இளைஞர்களை குறிவைத்து காய் நகர்த்தும் கட்சிகளுக்கு சற்று ஆப்படித்தாற் போல் இருக்கும். பாரம்பரிய கட்சியான திமுகவிலும் இளைஞர்களுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பகத்தன்மை ஏற்படும்.
பரிகாரம்: ஆன்மிக அமைச்சர் சேகர்பாபுவை சற்று பொத்திக்கொண்டு இருக்கச் சொல்லவும். அன்பில் மகேசை கொஞ்சம் அமைச்சர் வேலையையும் பார்க்க சொல்லவும். கீதாஜீவன், கயல்விழி செல்வராஜ்-ஐ அவ்வப்போது அறிக்கையாவது கொடுக்கச் சொல்லவும். பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு சற்று முக்கியத்துவம் கொடுக்கவும்.
அதிமுக
கிரகநிலை – உட்கட்சி ஊசலாட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளது ஒருபுறம். முள்ளைப் பிடித்தாலும் முழுசாக பிடிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி என்ற அறிவிப்பு மறுபுறம்.
பலன்: அதிமுக என்றாலே இரட்டை இலைச்சின்னமும், பேரறிஞர் அண்ணா உருவம் தாங்கிய கட்சிக் கொடியும் தான். கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்தின் வாசலிலும் கட்சியின் பெயருக்காகவும், சின்னத்திற்காகவும் எத்தனையெத்தனை வழக்குகள். ஆனால் கட்சியின் சின்னத்தை காப்பாற்றியாகி விட்டது. இனி இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முழுமையாக பயன்படுத்த முடியும். சைக்கிள் கேப்பில் லாரி ஓட்ட நினைத்தவர்கள் எல்லாம், இனி இபிஎஸ் பின்னால் டபிள்ஸ் வருவது மட்டுமே ஒரேவழி. தொங்குசதைகள் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்றோரை தாமரை இலைக்குள் பொட்டலம் கட்டி போட்டாகி விட்டது.
பரிகாரம்: செங்கோட்டையனுக்கு வாய்ப்பூட்டு சட்டம் அவசியம். கூட்டணி வேறு, கொள்கை வேறு என்பதை சிறுபான்மையினருக்கு தெளிவுற எடுத்துச் சொல்லும் வகையில் திண்ணைப் பிரச்சாரத்தை இப்போதே ஆரம்பித்தால், சேதாரத்தை சற்றேனும் குறைக்க முடியும். நீட், மும்மொழிக் கொள்கை போன்றவற்றில் அதிமுகவின் நிலைப்பாடு இதுதான் என்பதை உரக்கச் சொல்லியாக வேண்டும். பூத் கமிட்டிக் கூட்டங்களை அதிகரிக்க வேண்டும்.
பாஜக
கிரகநிலை – கைப்புள்ள அண்ணாமலையை சென்ட்ரலுக்கு ட்ரான்ஸ்பர் செஞ்சாச்சு. கன்னிங் புள்ளி நயினாரை ஸ்டேட் தலைமைக்கு கொண்டு வந்தாச்சு.
பலன்: அவங்களுக்கு புடிக்குதோ இல்லையோ கடத்தி கொண்டு வந்து தாலி கட்ற மாதிரி அதிமுகவுடன் கூட்டணி வைத்தாகி விட்டது. கடந்த முறை 4 சீட் என்பதை இந்தமுறை 5-ஆக உயர்த்த நம்பிக்கை பிறந்துள்ளது. எடப்பாடியும் கவுண்டர், அண்ணாமலையும் கவுண்டர் என்பது ஒருபுறம். சசிகலா, ஓபிஎஸ் போன்றோரை ஓரங்கட்டியதால் முக்குலத்தோருக்கு எதிரான மைண்ட்செட் பாஜகவுக்கு என்பதை நயினாரை தலைமைபீடத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் உடைத்தாயிற்று. இனி வீடியோ அரசியல் இருக்காது என்ற ஆசுவாசம். சவுக்கடி நாடகங்கள் இருக்காது என்ற நிம்மதி.
பரிகாரம்: தமிழிசை அக்காவுக்கு நேரடியாக கட்சியில் பொறுப்பு கொடுப்பது நல்லது. இரட்டை ஆவர்த்தனம் கட்சிக்கு நல்லதல்ல. இயக்க அரசியல் வேறு, வாக்கரசியல் வேறு.. ஹெச்.ராஜா போன்றோரை வெறுமனே மதஅரசியல் பேசுவதை நிறுத்தச் சொல்லுங்கள். அமித் ஷாவுக்கு வேண்டுமானால் குருமூர்த்தி தேவைப்படலாம், ஓட்டு வாங்குவதற்கு அவர்கள் பலனளிக்க மாட்டார்கள். தள்ளி வைக்கவும். திமுக எதிர்ப்பு அரசியல் மட்டுமே பாஜகவின் அரசியல் என்று இருந்தால் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏன் மக்களுக்கு வேண்டும் என்பதை தெளிவுபடுத்த கடந்த 40 ஆண்டுகளில் பாஜக தவறிவிட்டது. அதனை கருத்தில் கொள்ளவும்.
தவெக
கிரகநிலை – மாநாடு, பொதுக்குழு, போராட்டங்கள், அறிக்கைகள் என்று ஒருமாதிரி அரசியல் கட்சி தோரணைக்கு வந்தாகி விட்டது.
பலன்: நடிகர் என்ற இமேஜ் பெரிய ப்ளஸ். களத்தில் 20 ஆண்டுகள் உழைத்த அரசியல் கட்சிகளுக்கு கிடைக்காத ரீச் மிக எளிதில் விஜய்க்கும், அவரது கட்சிக்கும் கிடைத்துள்ளது. வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை ஊடகங்களும் விஜய்க்கு அளித்து வருகின்றன. மனப்பாடம் செய்து பேசுகிறார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் விஜயின் மேடைப்பேச்சுக்கள் ஈர்க்கத் தவறவில்லை. எந்த போராட்டத்திற்கு அறிக்கை விடுத்தால் பேசுபொருளாகுமோ அதற்கு மட்டும் அறிக்கை விட்டு அரசியல் நடத்துவது. கொள்கைப்பிடிப்பு இருக்கிறதோ, இல்லையோ, ரசிகர்கள் என்ற இளைஞர் பட்டாளத்தை தன்னகத்தே வைத்துள்ளது.
பரிகாரம்: இது வரை நேரடியாக ஊடக சந்திப்பை விஜய் நடத்தவில்லை, எதிர்கொள்ளவில்லை. தன்னை மோடியாக, ஜெயலலிதாவாக விஜய் கற்பிதம் செய்து கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. அது மைனஸ். விஜய் என்ற ஒற்றை முகத்தைத் தாண்டி இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவர் கூட இன்னும் மக்களிடம் சென்று சேரவில்லை. இன்னும் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே வராமல் இருப்பது தவறு. களத்திற்கு வந்து அரசியல் பழக வேண்டும். கூட்டமெல்லாம் ஓட்டாய் மாறுமா? என்பது அடுத்த ஆண்டு தான் தெரியவரும். அரசியல் பச்சோந்திகளை பக்கத்தில் வைத்திருப்பது ஆபத்து. அரைகுறை புத்திசாலிகள் அதைவிட ஆபத்தானவர்கள் (அறிக்கை எழுதுபவர்கள்).
– க.அரவிந்த்குமார்