வீட்டில் பூசணி காய் சமைக்கும் போது, பெரும்பாலும் அதில் உள்ள விதைகளை தூக்கி வீசி விடுவோம். ஆனால், அந்த பூசணி விதைகளின் நன்மைகள் பற்றி தெரிந்தால் அதை தூக்கி வீச மாட்டீர்கள். அட ஆமாங்க! தேவையில்லை என்று தூக்கி வீசும் அந்த பூசணி விதைகளில் தான் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் அத்துனை ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. தற்போது இந்த பதிவில் பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கிறது:
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், ஆண்கள் 50 வயதை தாண்டிவிட்டாலே புரோஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இதை தடுக்க ஆண்கள் அன்றாக உணவில் பூசணி விதையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புரோஸ்டேட் புற்றுநோயின் வளர்ச்சியை குறைக்கிறது.
விந்தணுக்களின் தரம் அதிகரிக்கிறது:
ஆண்களுக்கு ஏற்படும் ஜிங்க் குறைபாடு விந்தணுக்களின் தரத்தை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை அதிகரிக்க செய்கிறது. எனவே, உடலில் ஜிங்க் குறைபாட்டை நிவர்த்தி செய்ய தினமும் பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். ஏனென்றால், பூசணி விதையில் ஜிங்க் தாது ஏராளமாக உள்ளது. இது, ஒட்டுமொத்த விந்தணு தரத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்களின் இனப்பெருக்க செயல்திறனை அதிகரிக்கிறது.
மற்ற ஆரோக்கிய நன்மைகள்:
பூசணி விதைகளில் மக்னீசியம் அதிகளவு உள்ளது, இது ஆண்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
பூசணி விதையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், தூக்கம் நன்றாக வரும்.
பூசணி விதைகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
மனச்சோர்வால் அவதிப்படுபவர்களுக்கு பூசணி விதை ஒரு வரம் என்றே சொல்லலாம். எனென்றால், பூசணி விதையில் உள்ள ட்ரிப்டோபான் மனச்சோர்வை இயற்கையாகவே குறைக்கும் தன்மை கொண்டது.
குறிப்பு: பூசணி விதைகள் என்னதான் ஆரோக்கியமானவையாகவே இருந்தாலும், அளவுக்கு மீறி சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, பூசணி விதைகளை தினமும் 1-2 ஸ்பூனுக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.