சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முற்பட்ட ரவுடியை, சிறுமியின் பெற்றோர் தடுக்க முயன்றதால், அவர்களையும் அடி உதைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தான் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியைச் சேர்ந்தவன் சரித்திர பதிவேடு ரவுடி சகா (எ) சீனிவாசன். வயது 24. இவர் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தான், அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை சீனிவாசன் ஒரு தலைப் பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் அந்த சிறுமியை காதலிக்கும் படி சீனிவாசன் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்து உள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த ரவுடியிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தான், 16 வயது சிறுமியை கடத்திச் சென்று ரவுடி சீனிவாசன், திருமணம் செய்ய முற்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கும், சீனிவாசனுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில், சிறுமியின் பெற்றோர்களை அருவாளால் வெட்ட முற்பட்டதோடு, சிறுமியின் தாய் மீது சீனிவாசன் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார்.
இதில் சிறுமியின் தாய், தந்தை ஆகிய இருவரும் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் , சீனிவாசன் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், சிறுமிக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், ரவுடி சீனிவாசனை அதிரடியாக கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்தனர்.
இதனையடுத்து, அவரை வேலூர் மதிய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.