Tue. Jul 1st, 2025

‘ரிவேன்ஜ்..’ மாமியாருக்கு எதிராக மருமகள் போட்ட ஸ்கெட்ச்.. போலீசாரிடம் மாட்டிக்கொண்டது எப்படி?

மாமியார் மருமகளை கொடுமை செய்ததற்காக மருமகள் போட்ட பிளான் போலீசார் விசாரணை அம்பலமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவியும், கட்டையால் தாக்கியும் 6 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி  அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (72). இவரது மனைவி கனகா (65). மகன் இருந்தும் வயதான தம்பதி மண்டலவாடி பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆறுமுகம்.

இந்நிலையில், கடந்த மாதம் 31 ஆம் தேதி இரவு மூதாட்டி கனகா வீட்டிலிருந்து வெளியே வந்த போது, அவரது முகத்தில் மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடியைத் தூவி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இது குறித்து, அவரது மகன் ஆறுமுகம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கனகாவின் மருமகள் வசந்திதான் மாமியாரைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது உறுதியானது.

இது குறித்து, காவல் துறையினர் கூறும்போது, “வசந்திக்கும் அவரது கணவர் ஆறுமுகத்துக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு‌ ஏற்பட்டு வந்துள்ளது. ஆறுமுகம் அவரது தாயார் கனகா சொல்வதைக் கேட்டு மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததால் மாமியாரைப் பழிவாங்கத் திட்டமிட்ட மருமகள் வசந்தி தனது உறவினரான கவுண்டப்பனூரை சேர்ந்த மைக்கல் ராஜ் (21). என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

அவரும், வசந்திக்கு உதவி செய்ய அவரது மாமியார் கனகாவைத் தாக்க முடிவு செய்து இதற்கான திட்டம் தீட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31ம் தேதி இரவு கனகா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அங்குக் காத்திருந்த இருவரும் மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி உருட்டுக் கட்டையால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், தங்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிச் சங்கிலியையும் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வசந்தி மற்றும் மைக்கேல்ராஜ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்கச்சங்கிலியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *