தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நமது உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், உலர் பேரீச்சம்பழம் அதைவிட மிகுதியான நன்மைகளை வழங்குகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நற்பதமான பேரீச்சம்பழத்தை நன்றாக உலர்த்தி கிடைக்கக் கூடியவையே இந்த உலர் பேரீச்சை, இதை சுவாரா என்றும் சொல்வதுண்டு. தினமும் 4-5 உலர் பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருவதால், உடலுக்கு அத்துனை நன்மைகள் கிடைக்கின்றன.
மலச்சிக்கலை போக்கும்
உலர் பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை தூண்டி உணவை செரிக்க செய்கிறது. குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே, அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், 4-5 உலர் பேரீச்சம்பழத்தை இரவு தூங்கும் முன் 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்துவிட்டு, பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வரவும்.
இரத்த சோகையை தடுக்கும்
உலர் பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து அத்தியாவசியமான ஒன்று. எனவே, இரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் 4-5 உலர் பேரீச்சம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.
எலும்புகளை வலுவாக்கும்
தற்போது ஏராளமானோர் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இவற்றில் இருந்து குணமாகவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தினமும் இந்த உலர் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்.
சருமத்தை பளபளப்பாக்கும்
ஊற வைத்த உலர் பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிடுவது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கிறது. உடைந்த செல்களை சீராக்குகிறது. தோலின் பளபளப்பை கூட்டி இளமையாக தோன்ற செய்கிறது. மேலும், சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்கி மினுமினுப்பாக வைத்துக் கொள்கிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த உலர் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் 1-2 பேரீச்சையை தண்ணீரில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும், மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கலாம்?
எக்கச்சக்கமான ஊட்டச்சத்து இருப்பதால் உலர் பேரீச்சம்பழத்தை அனைத்து வயதினமும் சாப்பிடலாம். எனவே, குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சத்தான உணவை கொடுத்துவருவது அவர்கள் பிற்காலத்தில் ஏற்படும் நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு உலர் பேரீச்சம்பழத்தை ஊற வைத்துக் கொடுக்காமல், அதை பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள், அந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் பாலில் கலந்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கவும், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகளை போக்கவும் உதவும்.