பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல்நலக்குறைவால் காலமானார்.
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு’ திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் கோதண்டராமன். பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் துணை வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். 65 வயதான கோதண்டராமன் கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் போனதால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில்இன்று காலமானார்.
கோதண்டராமன் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.