Mon. Jun 30th, 2025

Police வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி.. ராணுவ வீரரிடம் கைவரிசை!

Police வேலை வாங்கித் தருவதாக கூறி, ராணுவ வீரரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன், மத்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி உடல் நிலை காரணமாக விருப்ப ஓய்வு பெற்று, தஞ்சாவூர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில், தன்னுடன் பணியாற்றும் துரையரசன் என்பவரிடம் தனது அரசு வேலை விசயமாக பேசியிருக்கிறார். அதற்கு அவர், “அரசு வேலை வேண்டும் என்றால், தேர்வு எழுதினால் மட்டும் போதாது. மாறாக அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே பணி கிடைக்கும்” என்று, கூறியதாக தெரிகிறது.

 

அத்துடன், “தன் மகன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில பொறுப்பில் இருப்பதாகவும், அவர் பலருக்கு வேலை வாங்கி கொடுத்து உள்ளதாகவும்” ஆசை வார்த்தை கூறியதாகவும் கூறப்படுகிறது.

 

இதை நம்பிய அர்ஜுனன் உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட விசிக நிர்வாகி அமுதனை நேரில் சந்தித்து உள்ளார். அப்போது, தன்னுடன் இருந்த நபரை “முரசு தமிழப்பன் என்றும், இவர் தூத்துக்குடி மற்றும் தென்காசி மண்டல செயலாளராக இருப்பதாகவும், அமைச்சர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இவர் நன்கு பழக்கமுடையவர்” என்றும், அவர் கூறியுள்ளார்.

 

இதனையடுத்து, “தனது மகன் எப்படியாவது உதவி ஆய்வாளராக விட வேண்டும்” என்கிற ஆசையில், அர்ஜுனன் 3.20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கிருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்து, “உங்கள் மகனின் பெயர் பட்டியலில் விடுபட்டுள்ளதாகவும் அது குறித்து ஆணையரிடம் பேச வேண்டும்” என்றும், அவர் கூறியுள்ளார்.

 

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உள்ளே வந்து, கீழே உள்ள ஆவின் பாலகம் பகுதியில் அவரை அமர வைத்துவிட்டு, பணம் வாங்கியவர் மட்டும் உள்ளே சென்று உள்ளனர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்து “2 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், பணம் கொடுத்தால் பெயரை சேர்த்து விடுவதாகவும்” கூறி, காவல் ஆணையர் அலுவலகத்திலேயே மேலும் 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு இருக்கிறார்.

 

அதன் தொடர்ச்சியாக, ஒரு மணி நேரம் கழித்து “அதிகாரிகளிடம் பேசி விட்டோம் என்றும், உங்கள் மகனின் பெயர் நிச்சயம் வந்து விடும்” என்றும், அவர் கூறி அர்ஜுனனை அழைத்து சென்று உள்ளார். ஆனால், கடந்த 2022 மற்றும் 23 ஆண்டுகளில் எந்தவொரு பட்டியலிலும் எனது மகன் பெயர் வரவில்லை எனவும், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் திருச்செந்தூரில் இருந்து நான் இருக்கக்கூடிய இடத்தை அடகு வைத்து 6.71 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் அவர்களிடம் கொடுத்து உள்ளேன் என்றும், வேலை கிடைக்காததால் பணத்தை திருப்பி கேட்டால், அவர்கள் தர மறுப்பதாகவும் மேலும் தகாத வார்த்தைகளில் பேசி திட்டி ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்” என்றும், அவர் பாதிக்கப்பட்டவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

 

குறிப்பாக, இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் 3 முறை நேரடியாக சென்று கூறிய போதும், அவரது உதவியாளரை வைத்து உடனடியாக அவர்களுக்கு தொடர்பு கொண்ட கேட்ட போது, “10 நாட்களில் பணத்தை ஒப்படைப்பதாக கூறிய நிலையில், இது வரை பணம் ஒப்படைக்காததால் டிஜிபி நேரில் சந்தித்து புகார் மனு அளித்து உள்ளதாகவும்” புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் வலியுறுத்தி உள்ளார்.

 

இதனிடையே, காவல் உதவி ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ஓய்வு பெற்ற மத்திய எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *