தமிழகத்தில் மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு ஊர்களில் இருக்கும் அனைவரும் சொந்த ஊருக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இது ஒருபக்கம் இருந்தாலும், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 கரும்பு ஆகியவற்றோடு பொங்கல் பரிசு தொகையாக ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு வரக்கூடிய பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு எப்போது பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்ற முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், வருமான வரி செலுத்துவோர், பொருளில்லா அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் தவிர மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.
ஆனால், இந்த முறை எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் போகி பண்டிகையும், 14 ஆம் தை பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது.
எனவே, ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்தே டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும், 10 ஆம் தேதியிலிருந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த முறை பொங்கலுக்கு முன்னதாக வரவு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.