மேட்ரிமோனியில் மூலம் இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி 20 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட காதல் மன்னனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கணவனை இழந்து பள்ளி படிக்கும் மகனோடு தனியாக வாழ்ந்து வரும் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், சில மாதங்களுக்கு முன்பாக மேட்ரிமோனியல் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட கார்த்திக் என்பவர் தனக்கும் திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தான் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும் தங்களை திருமணம் செய்து கொள்வதுமாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
முக்கியமாக, தனது பத்து வயது மகனை, தனது மகன் போல் பார்த்துக் கொள்வதாகவும் திருமணம் செய்து கொண்டு இருவரையும் அமெரிக்கா அழைத்துச் செல்வதாக கூறி அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல விசா எடுப்பதற்காக ரூபாய் 5 லட்சம் பணம் அனுப்புமாறு கேட்டதன் பெயரில், கார்த்திக் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியதாகவும் சில தினங்கள் கழித்து மீண்டும் வேறு காரணத்திற்காக பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்து, அவர் குறித்து சோதனை செய்தபோது அவர் மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட சென்னை காவல்துறை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அந்த வங்கிக் கணக்கு விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அது தன்னுடைய காதலர் பிரசாந்த் என்பவர் அமெரிக்காவின் டிஃபன்ஸ் துறையில் டேட்டா அனலைஸ்டாக பணி புரிந்து வருவதாகவும், சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு நபர் தனக்கு பணம் தர வேண்டும் எனவும் தன்னிடம் இந்திய வங்கி கணக்கு இல்லை என்பதால் தன்னிடமிருந்து வங்கிக் கணக்கை வாங்கி கொடுத்ததாகவும் பின்னர் அதில் ரூபாய் 5 லட்சம் பணம் வந்ததையும் அந்த பெண், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ரூபாய் 5 லட்சத்தில் மூன்று லட்ச ரூபாயை வளசரவாக்கத்தில் உள்ள மற்றொரு நபருக்கு அனுப்ப வேண்டும் என தனது காதலர் கூறியதன் பேரில் மூன்று லட்ச ரூபாய் பணம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கை ஆய்வு செய்து பார்த்தபோது அது மற்றொரு இளம்பெண்ணுக்கு சொந்தமானதை அறிந்தனர்.
இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது பிரசாந்த் ஆனந்த் என்ற தனது காதலர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதாகவும் மேட்ரிமோனியில் இணையதள மூலமாக அறிமுகமாகி சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அந்த பெண்ணிடம் இருந்து மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்வதாக கூறி சுமார் 4 லட்சம் பணம் பெற்றதும் தெரியவந்தது. இப்படியாக, அவர் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
இப்படியாக, மோசடி செய்யப்பட்ட பணத்தில் தென்காசியில் தனது வீட்டு அருகே Smart kids Fun School என்ற சிறுவர்களுக்கான ‘கிட்ஸ் ஸ்கூல்’ நடத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும், ‘அம்மாவின் கைவண்ணம்’ என்ற பெயரில் மிளகாய்பொடி நிறுவனம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
மேட்ரிமோனியல் இணையதளத்தில் கார்த்திக், கார்த்திக் சந்திரன், பிரசாந்த் ஆனந்த், பிரசாத் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் கிடைக்கும் அழகான ஆண் நபர்கள் புகைப்படத்தை எடுத்து அதன் மூலமாக இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்த ஜார்ஜ் குமார் துரை இன்னும் எத்தனை பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி ஈடுபட்டுள்ளார் என்று, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.