சூடான அயன் பாக்ஸை வைத்து காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவனை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்ன புரசைவாக்கம் குழந்தைவேலு தெருவைச் சேர்ந்த 32 வயதான நாசியா, ஹாலித் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்று, கூறப்படுகிறது.
நாளடைவில், போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஹாலித்துக்கு, அப்பகுதியில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, கணவன் மனைவியிடையே கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் ஹாலித் சந்தேகப்பட்டு தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாகம் கூறப்படுகிறது.
இதனால், விவாகரத்து செய்து கொள்ளலாம் என நாசியா நேற்று இரவு கூறியதாகவும் தெரிகிறது. இதனால், கணவன் கோபம் அடைந்த நிலையில், கணவன் மனைவி இடையே, தகராறு ஏற்பட்டு உள்ளது.
அதன்ப பின்னர், நாசியா தனது அறையில் தூங்கச் சென்று உள்ளார். அப்போது, அவர் கண் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது, கதவை திறந்து உள்ளே சென்ற ஹாலித், அயன் பாக்ஸை பிளக்கில் பொருத்தி சூடாக்கி அதை மனைவி நாசியாமீது வைத்து விட்டு தப்பி ஓடி உள்ளார். இதில், வலி பொறுக்காமல் அந்த பெண் அலறி துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முக்கியமாக, பலத்த தீக்காயம் அடைந்த நாசியா, உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஹாலித்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.