“சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டியே, அதிமுகவை கூட்டணிக்கு பணியவைத்து உள்ளார்கள் என்பது, அண்ணாமலை பேச்சில் தெளிவாக தெரிகிறது” என்று, காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் தனியார் திருமண மண்டபங்களில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் சேர்ந்து தொடங்கி வைத்தனர்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு செய்தியாளரை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், “முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேச்சு என்பது, மிகவும் அதிர்ச்சிகரமான பேச்சாவே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதற்கு நடவடிக்கை எடுப்பாரா?” என்றும், கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கே டி ராஜேந்திர பாலாஜி, தொடர்ந்து பலரையும் விரட்டி வருகிறார். குறிப்பாக மாஃபா பாண்டியராஜன் போன்றவர்களை மிரட்டி இருப்பது என்பது ஏற்க முடியாது. மாஃபா பாண்டியராஜனிடம், ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், மாணிக் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
“பொது வெளியில் மிரட்டக் கூடிய அதிகாரத்தை கே டி ராஜேந்திர பாலாஜிக்கு யார் கொடுத்தார்? என்பது தெரியவில்லை. உட்கட்சி விவகாரம் என்றாலும், பொது வெளியில் நடந்ததால் இதைப் பற்றி பேச வேண்டி உள்ளது” என்றும் குறிப்பிட்ட மாணிக் தாகூர் எம்.பி. விளக்கம் அளித்தார்.
அப்போது, “அதிமுக பாஜக கூட்டணி வைப்பதாக தகவல் வந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்து பேசிய மாணிக் தாகூர் எம்.பி., “பாஜக – அதிமுக கூட்டணி என்பது, ஏறக்குறைய உறுதி ஆகிவிட்ட நிலையில், அதைப்பற்றி அண்ணாமலையின் ஆணவ பேச்சு வெளியில் வந்திருக்கிறது” என்றும், சுட்டிக்காட்டினார்.
மேலும், “பாஜக அரசு சிபிஐ, அமலாக்க துறையை வைத்து அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்து உள்ளார்கள் என்பது, அவருடைய பேச்சிலேயே தெரிகிறது என்றும், அதிமுக என்பது பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்ட கட்சியாக மிக தெளிவாக தெரிகிறது” என்றும், மாணிக் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.