ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், சூட்டோடு சூடாக வந்து திருமாவளவனை சந்தித்து தனியாக பேசியது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் 19 புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று உத்தரவிட்டார். அதில், முதல் நபராக தழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டார்.
விஜய் கட்சியில் இணைந்த வேகத்தில் சூட்டோடு சூடாக ஆதவ் அர்ஜூனா, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அவருக்கு நினைவு பரிசு மற்றும் புத்தகம் ஒன்றையும் அவர் பரிசாக வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, திருமாவளவனை சந்தித்து அவர் 30 நிமிடங்களுக்கு மேலாக தனியாக பேசினார். பின்னர், இருவரும் ஒன்றாக வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “ஒரு தனையனாக திருமாவளவனிடம் வாழ்த்து பெற்று, ஆசீர்வாதம் வாங்க வந்துள்ளேன்” என்று, ஆதவ் அர்ஜுனா பேசினார்.
முக்கியமாக, “பெரியார், அம்பேத்கர் கொள்கை வழியில் தவெக பயணிக்கிறது என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் என்றும், பெரியார் அரசியலை தான் நாங்கள் முன்னெடுப்போம் என விஜய் கூறியதாகவும், அவர் கூறினார்.
குறிப்பாக, “தனையனாக தந்தையிடம் வாழ்த்து பெற்றுள்ளேன்” என்றும், ஆதவ் அர்ஜுனா பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கொள்கை ரீதியான பயணத்தையும் கள அரசியலையும் திருமாவளவன் அவர்களிடம் தான் கற்றுக் கொண்டேன் என்றும், புதிய பொறுப்பு, கொள்கை ரீதியாக என்னுடைய பங்களிப்பு தவெகவில் இருக்கும்” என்றும் தெரிவித்தார்.
“எனக்கு திருமாவளவன் வாழ்த்து சொன்னார். அறிவுரையும் கூறியுள்ளார். கொள்கைப்படி அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பதை என்னிடம் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்” என்று, ஆதவ் அர்ஜுனா பேசினார்.
இதனிடையே, ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், முதல் சந்திப்பாக திருமாவளவனை சந்தித்து தனியாக பேசியது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.