தமிழர்களின் பழைமையான பண்டிகைகளில் கார்த்திகை தீபமும் ஒன்று. இந்த பண்டிகையை சில இடங்களில் கார்த்திகை கூம்பு என்று அழைப்பதுண்டு. கார்த்திகை மாதத்தில் வரும் இந்த கார்த்திகை தீபமானது ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் மட்டும் இவ்வளவு சிறப்பாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது காரணம் என்னவென்று தெரியுமா? வாங்க தெரிந்துக் கொள்வோம்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரலாறு:
ஒரு சமயம் மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. அப்போது, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவரே பெரியவர் என்று சிவபெருமான் கூறினார்.
தானே பெரியவன் என்ற ஆணவத்துடன் சிவபெருமானின் முடியை காண சென்ற பிரம்மாவுக்கு தோல்வியே கிடைத்தது. அதேபோல், மகாவிஷ்ணுவும் முடியை காண முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்டார். அப்போது, மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஒளிப்பிழம்பாய் காட்சியளித்தார்.
தாங்கள் கண்ட காட்சியை உலக மக்களுக்கும் காட்டி அருள வேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொண்டனர். அதனால், பிரம்மாவிற்கும், மகாவிஷ்ணுவிற்கும் காட்சி அளித்த திருவண்ணாமலை தலத்திலேயே ஈசன் மலையாக அமைந்தார்.
மேலும், ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் சிவபெருமான் ஒளிப்பிழம்பாய் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகம்.