சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த “புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியானது. புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால், அதைவிட இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு, உடல்மொழி, வசனம் உச்சரிக்கும் முறை என அனைத்தும் அனைத்து மொழி ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
வெளியான முதல் நாளே புஷ்பா 2 உலகளவில் ரூ.265 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த நிலையில், டிசம்பர் 9 நேற்று வரை ரூ.922 கோடி வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் ரூல் செய்து வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று இரவுக் காட்சியுடன் புஷ்பா 2 திரைப்படம் ரூ.1001 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா முதல் பாகத்தில் கூலித் தொழிலாளியாக இருந்த அல்லு அர்ஜூன் (புஷ்பராஜ்), படிப்படியாக உயர்ந்து, அந்த காட்டுக்கே ராஜாவா மாறி என்ன செய்யப்போகிறார் என்பதே புஷ்பா 2 படத்தின் மைய கருத்து. அதுமட்டுமல்லாமல், புஷ்பா முதல் பாகத்திலேயே ஆக்ஷன் காட்சிகள் மாஸாக இருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அனைவரும் வியக்கும் அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றை எல்லாம் தாண்டி, கிளைமேக்ஸில் சங்கை கடித்து சாகடித்து ஜாத்தாரா போர்ஷனில் கங்கம்மாவாக காந்தாரா எஃபெக்டில் நடித்து அல்லு அர்ஜூன் மிரட்டி இருப்பார். இவையெல்லாம் தான் படம் இந்த அளவிற்கு வசூலை குவிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார். இந்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்து அல்லு அர்ஜூன் சம்பளம் குறைந்தது ரூ.350 கோடியாக உயரும் எனக் கூறுகின்றனர்.