Mon. Jun 30th, 2025

இன்றைய அரசியல் சிந்தனை! “மாநிலத்திலா? மத்தியிலா?” – spl story

ஜனநாயகம் என்பதை மக்கள் நலனுக்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதாக உணரும் பொழுது, கட்சி என்பது வேறு அரசாங்கம் என்பது வேறு! என்கிற அடிப்படையைப் அரசியல் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்! அரசும் நாடும் ஒருங்கிணைந்தது! நிலையானது! 

கட்சி என்பது அதில் பிரதிநிதித்துவம் பெறுகிற ஒரு அமைப்பு தான் . ஆனால் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அரசும் நாடும் நம்முடையது என்று நினைத்துக் கொண்டு தங்களின் மனம் போன போக்கில் செயலாற்றுகின்றன. இது கட்சிகள் சொல்லுகிற கொள்கைக்கும் நடைமுறைக்கும் பல சமயங்களில் பொருத்தம் இல்லாத ஒன்றாகவும் இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்று விட்டபின் நாடு அரசு போன்ற நிலையான ஜனநாயக அமைப்புகளை தங்களுக்குத் தங்கள் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக வளைத்துக் கொள்வதுதான் எப்போதும் அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகி விடுகிறது. இது அரசு நாடு போன்றவற்றின் மீது புரிதலற்ற ஒரு நிலை என்றும் சொல்லலாம்.

இன்றைக்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் எல்லோரும் இத்தகைய நிலையில் தான் இருக்கிறார்கள். இங்குதான் நேர்மையற்ற ஊழலும் அநீதிகளும் மற்றவர்களுக்கான மறுப்புகளும் நடக்கின்றன. நன்றாக யோசித்தால் இது மன்னராட்சி முறையைத்தான் இந்த நவீன காலத்திலும் புத்திசாலித்தனமாகப் பின்பற்றுகிறது! இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் போது நாடு மற்றும் அரசாங்கத்திற்குள் அறம் புரையோடிப் புண்ணாகி விடுகிறது!

நாளடைவில் அதன் விளைவுகளைத் தாங்க இயலாமல் பல கட்சி அமைப்புகள் சிதைந்து காணாமல் போகின்றன. இதுதான் தொடர்ந்து வரும் கட்சிகளின்ஆட்சி அதிகார வரலாறு! வாரிசு அளவான மன்னராட்சி முடிந்துவிட்டது என்று சொல்ல முடியவில்லை!.

அரசாங்கம் மற்றும் நாடு போன்ற நிலையான அமைப்புகளில் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் சம வாய்ப்பாகக் கிடைப்பதற்கென கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் வாக்குறுதிகள் யாவும் நடைமுறையில் வீணாக்கப்படுமேயானால் அக்கட்சிகள் நாளடைவில் கொள்கை இழப்பைச் சந்திக்கின்றன.மறுதலையில் மக்களின் ஏகோபித்த நம்பிக்கைகளையும் இழந்து விடுகின்றன. . கட்சி விசுவாசிகளின் அதிகார அமைப்பில் ஜனநாயகம் எப்போதும் கேலி செய்யப்படுகிறது.

உண்மையில் ஜனநாயகம் என்பது மக்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்பதற்கு இன்றைய அறிவுச் சமூகத்தில் அதிக விளக்கங்கள் வேண்டியதில்லை.

தனக்கு பிடித்த தகுதி அற்றவர்களையும் அரசியல் தலைவர் உத்தமராகவும், அவர்கள் சார்ந்த கட்சியே ஒழுக்கமான கட்சி என்றும், மற்றவர்கள் முழு அயோக்கியர்கள் என்கிற போக்கில்

ஜனநாயக விவாதம் எளிதாக பகைமையாக்கப்படுகிறது.

பொதுவெளியில் பேச கூசும் வார்த்தைகளை சர்வசாதாரணமாக சமூக ஊடகங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருவது வெட்கக்கேடு. அதிலும் மெத்த படித்த மேதாவிகள்தான் குற்றால அறிவி போன்று வசை சொற்கள் கொட்டுக்கிறார்கள் எவனோ ஒருவனுக்காக. இங்கு பொது வாழ்வில் #தகுதியேதடை. தலைமைக்கு அடிமையாக இருப்போருகளுக்கு மட்டுமே ( மந்தி)ரி…. திடீர் என மந்திரி எந்திரி என நாகரிகம்யற்று தலைமையின் சித்தம் போல சொல்லும் நிலை இந்த காலத்தில்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பல்வேறு இனங்கள்.மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரம் போன்றவை ஆதிகாலம் தொட்டு இருந்து வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அவை சுய ஆதிக்கத்தை அடைந்துள்ளன. இந்தியாவில் அதன் பாதுகாப்பிற்கு பல்வேறு நல்லிணக்க ஒருமைப்பாட்டிற்கு அதன் இயல்பு வாழ்க்கைக்கு அதன் நம்பிக்கைகளுக்கு ஆபத்தற்ற தன்மையையும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு நிவாரணங்களையும் கொண்டு செலுத்துவதையே முதன்மைக் கடமையாக ஒரு அரசாட்சி மேற்க்கொள்ள வேண்டும்.

தொழில் வணிகம் விவசாயம் உழைப்பு வரி செலுத்துதல் என அதிக மக்கள் தொகை கொண்ட சமூகங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை நிர்வகிக்க ஒரு கட்சி வரும்போது அது எவ்வளவு ஆற்றல் மிக்கதாக சேவை மனப்பான்மை உடையதாய் சுயநலமற்றதாய் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

ஒரு சில தனிநபர்களுக்காக அதிகார மோகத்திற்காக பதவிச் சுகங்களுக்காகக் கட்சியை நடத்துவது எப்போதும் மோசமான நிலைக்குத்தான் கொண்டு செல்லும். நான் ஏற்கனவே பலமுறை சொல்லி வருவது போல மிகையான வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியப்படாத இலவசங்கள் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறை போன்றவற்றால் ஒரு சமூகம் நாகரிகமற்ற பிற்போக்கு நிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது!

மக்கள் நலம்,மிகுந்த கவனமாக ஆட்சியை நடத்த வேண்டும். அத்தகைய தன்னலமற்ற தலைவர்களை எந்தக் கட்சி கொண்டுள்ளது என்பதுதான் என் போன்றோரின் கேள்வி?

 

– கே. எஸ். ராதாகிருஷ்ணன்

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *