நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு உப்புச்சத்து அத்தியாவசியமான ஒன்று. பொதுவாக, இந்த உப்புச்சத்தானது நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், உணவு சுவையாக இருக்க வேண்டும் என்றால் உப்பு தான் முக்கியமான உணவுப் பொருளாகவும் உள்ளது.
அதற்காக, உண்ணும் உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுவது இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துக் கொடுத்து விடும். எனவே, சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை எப்போதும் கவனிக்க வேண்டும்.
சிறுவயதில் இருந்தே உப்பின் அளவைக் குறைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். ஒருவேளை, உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்.
தாகம் எடுப்பது:
பொதுவாக உப்பு அதிகமாக சாப்பிட்டால் அடிக்கடி தாகம் எடுக்கும். இதற்கு உப்பில் உள்ள அதிகப்படியான சோடியம் தான் காரணம். இந்த சோடியத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக, உயிரணுக்கலில் இருந்து தண்ணீர் வெளியேறி இரத்த ஓட்டத்தில் சேரும். இதனால், உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க அடிக்கடி தொண்டை மற்றும் வாய் வறண்டு தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.
அடிக்கடி தலைவலி:
இன்றைய அவசர வாழ்க்கை முறையில் தலைவலி இல்லாமல் இருப்பது தான் அதிசயம். இருந்தாலும், அடிக்கடி தலைவலி வருகிறது என்றால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது என்றே அர்த்தம். அதாவது, சாப்பிடும் உணவில் அதிகமாக இருந்தால், அதன் விளைவு நீரிழப்பு தான். இது தொடர்ந்து நடக்கும்போது தலைவலி, கிறுகிறுப்பு, மயக்கம் மூலமாக அறிகுறியை காண்பிக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது:
பொதுவாக, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீரகம் தான் வடிகட்டுகிறது. ஆனால், உப்பு அதிகமாக உள்ள உணவை சாப்பிடும் போது, சிறுநீரகங்கள் இயல்பை விட அதிக நேரம் செயல்பட வேண்டியது வரும். இதனால், அடிக்கடி சிறுநீர் வரும். இதே நிலை தொடர்ந்து இருந்தால், காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்புக்கு தான் வழிவகுத்துக் கொடுக்கும்.
வீக்கம்:
அதிகமாக உப்பைச் சேர்த்துக் கொண்டால், வயிற்று பகுதி, முகம், விரல்கள், கணுக்கால் போன்ற பகுதிகளில் இயல்பை விட வீங்கி காணப்படும். ஏனென்றால், தொடர்ந்து அதிகப்படியான உப்புள்ள உணவுகளை சாப்பிடும் போது உடல் திசுக்களில் அதிகளவு திரவம் தக்கவைக்கப்படும். இதுவே வீக்கம் ஏற்படுவதற்கு காரணம். இந்த நிலையை எடிமா என்பர்.