சென்னையில் தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்த பெண் குழந்தை இறந்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் தான்இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்த அஜீத் குமார், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யாவுக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது.
இதனையடுத்து, குழந்தைக்கு ரன்சிகா என்று அவரது பெற்றோர் பெயர் வைத்தனர். குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆவதால், தாய் திவ்யா அவரது தாய் வீடான புளியந்தோப்பு கே.எம் கார்டன் முதல் தெருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை ரன்சிகாவுக்கு திவ்யா தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக குழந்தை ரன்சிகாவுக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, பதற்போன குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை தாய் திவ்யா புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது என்று கூறியதாக தெரிகிறது. பின்னர், திவ்யா குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு, மறுநாள் அதிகாலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்தார்.
இதன் பிறகு குழந்தை மூக்கில் இருந்து ரத்தம் வந்ததால் பயந்து போன தாய் திவ்யா, உடனே எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துமனையில் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.