பாகம்-1
இந்த கட்டுரையை முழுமையாக படிக்கும் முன்பாக, முதலில் ‘Trump Vs Zelensky’ யார்? ‘Russia – Ukraine’ நாடுகள் எப்படிப்பட்டவை என்ற அறிமுகம் அனைவருக்கும் அவசியம்..
டிரம்ப் – செலன்ஸ்கி உரையாடல் குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரசியப் பேரினவாத ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்து, மூன்றாண்டுகளாகப் போர் புரிந்து வரும் உக்ரைன் குடியரசுத் தலைவர் செலன்ஸ்கி, கடந்த 28.2.2025 அன்று வட அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்பின் வல்லரசு நாட்டாமையை, அந்த அநாகரிகத்தை எதிர்த்து வெளியேறியது தன்மானம் உள்ள வீரச்செயல்! செலன்ஸ்கி வாழ்க!
இரசியர்கள் எப்போதுமே “மகா ருஷ்யர்” என்ற, இனச் செருக்கு மிக்கவர்கள்! இதை, அதே இரசிய இனத்தில் பிறந்த மாபெரும் புரட்சியாளர் லெனினே சாடியுள்ளார். ஜார்ஜியராய்ப் பிறந்து அதிகார போதையில் இரசியராய் மாறிப்போன ஜே.வி. ஸ்டாலின் தமது ஆட்சியில், இரசியரல்லாத சிறுபான்மை தேசிய இனங்களிடம் பாகுபாடு காட்டிய போது, உடல் நலமின்றி ஓய்வெடுத்து வந்த லெனின், “மகா ருஷ்யரை விஞ்சிய மகாருஷ்யராக” ஜார்ஜியரான ஸ்டாலின், சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரம் செய்கிறாரே என்று விமர்சித்தார்.
ஜனநாயகச் செம்மலான லெனின் 1917-இல் சிறுபான்மை பெரும்பான்மை வேறுபாடின்றி, தேவைப்பட்டால் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையுள்ள தேசங்களின் கூட்டமைப்பாக சோவியத் ஒன்றியத்தை உருவாக்கினார். ஆனால், இரசிய இன – மொழி மேலாதிக்க செயல்முறைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், 1991-ல் பதினைந்து நாடுகளாக சோவியத் ஒன்றியம் பிரிந்தது!
அந்தப் பதினைந்து நாடுகளில் இரசியர்களுக்கு அடுத்த நிலை பெரிய இனம் உக்ரேனியர் – பெரிய நாடு உக்ரைன்! 2023-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உக்ரைன் மக்கள் தொகை 4 கோடியே 84 இலட்சத்து 57 ஆயிரத்து நூற்றிரண்டு பேர்! அதன் நிலப்பரப்பு 2 இலட்சத்து 33 ஆயிரத்து அறுபத்திரண்டு ச.கி.மீ.
இப்போது, இரசியாவின் குடியரசுத் தலைவராக இருப்பவர் சனநாயக ஜார்மன்னன் புத்தின்! இரசிய கம்யூனிஸ்ட்டுக் கட்சியை சர்வாதிகாரமாக முடக்கி, கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களை சிறையில் அடைத்து, தேர்தல் மோசடிகள் செய்து, தொடர்ந்து ‘ஜெயித்துக் கொண்டே’ இருப்பவர் புத்தின்!” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் மிக கடுமையாக விமர்சித்து உள்ளது.
இந்த கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க அடுத்த கட்டுரையை வாசிக்கவும்..