இழப்பதற்கு இனி ஏதுமில்லை, அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது.. என்ற கூற்று இன்றைய தேதிக்கு அதிமுகவுக்குத் தான் பொருந்தும். பொன்விழாவை கடந்த கட்சி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கட்சி.. தற்போதைய பிரதான எதிர்கட்சி… அதன் தேர்தல் கணக்குகளை சற்று அலசுவோம்..
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம், ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம், ஜோதி முத்துராமலிங்கத்தின் பசும்பொன் தேசியக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன.
உட்கட்சி மோதல்கள்
இந்த 5 ஆண்டுகளில் இரண்டு விதமான பிரச்னைகளை அதிமுக எதிர்கொண்டது. ஒன்று உட்கட்சி விவகாரம். அதிமுகவின் வாக்குக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போயஸ் கார்டன் வாசலில் வந்து நின்றதை நாடறியும். மோடியா இந்த லேடியா என்று சவால் விட்டு 38 இடங்களை அதிமுக வென்றது ஒருகாலம். ஆனால், ஜெயலலிதா உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்த நேரத்தில் வெங்கைய்ய நாயுடு வந்து பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது சிக்கல்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த சசிகலாவுக்கு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தாமதப்படுத்தினார். 18 மாதங்களாக கிடப்பில் இருந்த வழக்கில் திடீர் உத்தரவு வர சசிகலா சிறைக்கு சென்றார். ஓரிரு மாதங்களிலேயே டிடிவி தினகரனும் திகாருக்கு பார்சல் செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இணைந்து கூட்டுத்தலைமையாக ஆட்சி நடைபெற்றது.
ஆனால், அதன்பிறகும் அனல் ஓயவில்லை. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதும், கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதும் அதிமுகவை ஆட்சியின் பக்கம் கவனம் திருப்பாமல் திசைமாற்றியது. குருமூர்த்தி சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினேன், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான் இபிஎஸ் உடன் இணைந்ததேன் என்று ஓபிஎஸ்-ஏ வெளிப்படையாகக் கூறினார். அதாவது அதிமுகவுக்குள் நடக்கும் பல்வேறு விவகாரங்களுக்கு பாஜக பின்னணியில் இருந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாக அமைந்தது. இப்போது செங்கோட்டையன் புரட்சிக்குரல் எழுப்பியதன் பின்னணியையும் ஆராய வேண்டி இருக்கிறது.
இவ்வளவு உட்கட்சி மோதல்கள் வேறொரு கட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் அந்த கட்சி நெல்லிக்காய் மூட்டையாய் சிதறி இருக்கும். ஆனால் அதிமுகவில் ஒருசில தலைவர்கள் வேண்டுமானால் தடுமாறி இருக்கலாம். தொண்டன் ஒருபோதும் இரட்டை இலையை விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் தான் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பறிகொடுத்தபோதும் ஏறத்தாழ 40 சதவித வாக்குகளை பெற்றது. அதாவது 1,83,63,499 வாக்குகள். ஆட்சியைப் பிடித்த திமுகவின் வாக்கு சதவிதம் 45. பெற்ற வாக்குகள் 2,09,82,088. அதேபோன்று 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும், 31 சதவித வாக்குகளைப் பெற்றது. வலைதளங்களில் யார் கம்பு சுற்றினாலும் பதிவாகும் வாக்குகள் சொல்லும் யார் மக்கள் மனதை வென்றுள்ளார்கள் என்று…
கூட்டணிக் கணக்குகள்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் நின்றிருந்த இரண்டு முக்கியமான கட்சிகள் 2024 நாடாளுமன்ற தேர்தலிலேயே காணாமல் போய்விட்டது. ஒன்று பாமக. வன்னிய சமுதாயத்திற்கு எந்த அளவு சலுகைகளை வாரி வழங்க முடியுமோ அந்த அளவுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அள்ளிக் கொடுத்தார். உச்சக்கட்டமாக வன்னியருக்கு 10.5 சதவித உள்இடஒதுக்கீடு கொண்டு வந்தார். ஆனால் அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அப்படியிருந்தும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக, அதிமுகவை விட்டு விலகியது.
அதேபோன்று அதிமுக – பாஜகவின் பந்தம் என்பது பாயாசத்தில் போட்ட சர்க்கரை போல் இருந்தது. அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரால் அந்த பந்தம், தீப்பந்தமாக மாறி இருதரப்பையும் பொசுக்கி விட்டது. விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அதேசமயம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டது தேமுதிக. இப்போது மாநிலங்களவை சீட் ஒதுக்கீட்டில் அதிமுக – தேமுதிக இடையே மனக்கசப்பு நிலவுகிறது. அதேசமயம், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக பக்கம் தேமுதிக செல்வதில் ஒரு தயக்கம் உள்ளது. விருதுநகர் தொகுதியில் தேமுதிகவின் விஜயபிரபாகரன் வெறும் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மூன்றாவது இடத்தில் பாஜகவின் ராதிகா சரத்குமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வாங்கி இருந்தார். ஒருவேளை அங்கு பாஜக களமிறங்கி இருக்காவிட்டால் விஜயபிரபாகரன் வென்றிருப்பார் என்பது ஒரு கணக்கு.
2026 எதிர்பார்ப்பு
ஒருபக்கம் கட்சியின் சின்னம், உரிமை குறித்தான வழக்கு உச்சநீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவுக்குள் சேர்க்க வேண்டும் என உள்ளும்-புறமும் நெருக்கடிகள். இபிஎஸ் சமூகத்தைச் சேர்ந்த செங்கோட்டையனை வைத்து திடீரென கலகக் குரல்.
இதெல்லாம் எதற்காக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒன்று அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் இல்லையென்றால் அதிமுக என்ற கட்சியே கலகலத்து போய்விட வேண்டும் என்பது மேலிடத்துக் கணக்கு. ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை இபிஎஸ் ஆணித்தரமாக பலமுறை கூறிவிட்டார். உச்சநீதிமன்ற வழக்குகள், அமலாக்கத்துறை, சிபிஐ என பல்முனை நெருக்கடி உள்ளபோதும் இந்த உறுதிப்பாட்டுடன் நிற்பதற்கு தனி தில் வேண்டும்.
இபிஎஸ் என்ற ஒற்றைத்தலைமை இல்லாவிட்டால் இந்நேரம் அதிமுக என்ற கப்பல் கரைதட்டி நின்றிருக்கும். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் போன்றவற்றில் தொடர் தோல்விகளை இபிஎஸ் சந்தித்தார் என்பது அவர்மீதான விமர்சனம். தேர்தல் அரசியலில் தோல்வி என்பது ஒரு பொருட்டல்ல. களத்தில் நிற்கிறோமா என்பதே முக்கியம்.
அந்தவகையில் எதிர்வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறாது. அவ்வாறு இடம்பெற்றால் அது ஒரிஜினல் அதிமுக-வாக இருக்காது. நாடாளுமன்ற தேர்தல் கணக்கு வேறு, சட்டமன்ற தேர்தல் கணக்கு வேறு என்று பாமக, மீண்டும் அதிமுக பக்கம் வர அதிக வாய்ப்பு உள்ளது. அன்புமணி வந்துவிட்டால், ஜி.வேல்முருகன் வருவதற்கு தடையாகி விடும்.
அதிமுக வேட்பாளரை எதிர்த்து பலாப்பழ சின்னத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் நின்றுவிட்டு எப்படி ஒருங்கிணைந்த அதிமுகவில் சேர்வதற்காக ஓபிஎஸ் காத்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். அந்தவகையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் கடைசிவரை போராடிவிட்டு பாஜக அணியில் கரைசேர வாய்ப்புண்டு. பாஜக சமீபத்தில் நடத்திய இப்தார் நோன்பு திறப்புக்கு டிடிவி, ஓபிஎஸ் இருவரையும் அன்புடன் அழைத்ததை அரசியல் அரங்கம் பார்க்கத்தானே செய்தது.
மற்றபடி 2021-ல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பிறகட்சிகள் அப்படியே இந்தமுறையும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் அங்கம் வகிக்கும். அவை கலைந்து போகாது. தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசனுக்கு இந்தமுறை இரண்டு இடங்கள் கூடுதலாக அதிமுகவால் தரப்படக்கூடும்.
உட்கட்சி பிரச்னைகள் ஓய்ந்து, கட்சியின் சின்னமும் தக்க வைக்கப்பட்டால் எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கு சமமான போட்டியை அதிமுகவால் மட்டுமேதரமுடியும்.
அரசியல் தொடரும்…
– க.அரவிந்த்குமார்