“மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்ஜெட்டை பற்றி கூறியது அவரது அறியாமையை பிரதிபலிக்கிறது, அதை மறைக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களையும் அவர் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல” என்று, தவெக செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மக்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு என்று எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்று, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்து மத்திய பட்ஜெட்டை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டு பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன், விமர்சனம் செய்து உள்ளார்.
அதன்படி, “இந்திய அரசியலமைப்பின் 246-A என்பது சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டங்களை உருவாக்க மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் ஒரு சிறப்பு ஏற்பாடு ஆகும். மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா vs மோஹித் மினரல்ஸ் பிரைவேட் லிமிடெட் 2022 இன் படி, இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கடல் சரக்கு மீது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) விதிப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. முடிவு மே 19, 2022 அன்று எடுக்கப்பட்டது.
இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் இந்த பட்ஜெட்டை விமர்சிக்கிறோம். ஒன்று இது குரோனி கேபிடலிசத்தை ஊக்குவிக்கிறது. அதாவது, வணிகங்கள் அரசாங்கத்துடனான நெருங்கிய உறவுகளிலிருந்து லாபம் பெறும் சூழ்நிலை” என்றும், அவர் விமர்சித்து உள்ளார்.
“இரண்டாவதாக, பட்ஜெட் ஒதுக்கீட்டில் பாஜகவின் பாரபட்சம், NDA அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும், முக்கியமாக மத்திய பட்ஜெட் NDA கூட்டணிக் கட்சிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டது என்றும், இந்தியாவுக்காக அல்ல.. இது இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியை பாதிக்கிறது” என்றும், பகிரங்மாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பாக, “இந்த அநீதிக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாமல் நாங்கள் போராடுவோம்” என்றும், தவெக செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் பேசி உள்ளார்.