தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த முக்கிய கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.
இந்தநிலையில், கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை வெளியே இருக்குமாறு அனுப்பி வைத்துள்ளார். அதன்பின், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளிடம் தனித்தனியாக விஜய் ஆலோசனை செய்துள்ளார்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி பெறுவதற்கு பணம் கேட்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் உள்ளிட்டோரை வெளியில் அனுப்பியதிற்கும் இது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி பெறுவதற்கு பணம் கேட்பதற்கும், புஸ்ஸி ஆனந்த் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்வதற்காகவே அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் முக்கிய புள்ளிகளை வெளியே அனுப்பிவிட்டு ஆலோசனை நடத்தியது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.