Tue. Jul 1st, 2025

விஜய்க்கு பாதுகாப்பு தமிழக போலீசாரிடம் ஆலோசிக்கவில்லை” சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி

“விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து எங்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை” என்று, சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்து உள்ளார்.   

கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசாரின் தாகத்தை தணிக்க போக்குவரத்து போலீசாருக்கு 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று காலை போர் நினைவுச் சின்னம் அருகில் போக்குவரத்து போலீசாருக்கு ஆவின் மோர் பாக்கெட்டுகள் வழங்கி 2025 ஆம் ஆண்டிற்கான மோர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பித் ஹேட் Pith Hat காகித கூழ் தொப்பிகளை வழங்கினார்.

அத்துடன், ஆவின் மோர் வழங்கும் திட்டத்திற்காக, ஒரு மோர் பாக்கெட் ரூ.6.33 வீதம் நாளொன்றுக்கு 4,864 மோர் பாக்கெட்டுக்கு ரூ.30,789 என 120 நாட்களுக்கு ரூ.37,56,273 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காவலர்களுக்கு காலை, மாலை என இருவேளையும் மோர் வழங்கப்படுகிறது. போக்குவரத்து போலீசாருக்கு மோர் வழங்கி விட்டு சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கோடை காலத்தில் மார்ச் மாதத்தில் இருந்து போக்குவரத்து போலீசாருக்கு மோர் வழங்கும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அரசு ஆணைப்படி இதனை வழங்கி வருகிறோம். ஜூன் மாதம் வரை இது வழங்கப்படும். மோர் வழங்குவதற்கு ரூ. 37 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆவன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வழங்கி வருகிறோம். சென்னையில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்கள் 6 ஆயிரம் பேருக்கு இன்று முதல் வழங்க உள்ளோம்” என்று, கூறினார்.

மேலும், “திருமங்கலத்தில் டாக்டர் குடும்பத்தோடு இறந்தது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவுகிறது. விசாரணைக்கு பிறகு முழுமையாக தெரிய வரும். அதன் பிறகு சொல்கிறேன்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “தவெக தலைவர் விஜய்க்கு ஓய் பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு, எந்த வித ஆலோசனையும் சென்னை மாநகர போலீசாரிடம் நடத்தவில்லை” என்றும், காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *