ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞருக்கு, இயக்குனர் நெல்சனின் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து சென்ற 75 லட்சம் ரூபாய் பணம் கை மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில், தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அவரது கூட்டாளியும், வழக்கறிஞருமான மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வருவதால், அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில், மொட்டை கிருஷ்ணன் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்த உள்ளனர். அப்போது, தொடர்ச்சியாக இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிற்கு, தொடர்பு கொண்டது தெரிய வந்து உள்ளது.
இதனை அடுத்து, போலீசார் மோனிஷாவை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்பேது, கல்லூரியிலிருந்து மொட்டை கிருஷ்ணன் தனக்கு நண்பர் என்றும், ஒரு வழக்கு சம்பந்தமாகவும் பேசியதாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளாதாகவும் தகவல்கள் வெளியானது.
முக்கியமாக, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வங்கி கணக்கில் கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக பல தவணை முறையில் 75 லட்சம் ரூபாய் வரை மோனிஷா அனுப்பியதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், வழக்கு சம்பந்தமாகவும், நண்பர் என்ற முறையிலும் பணத்தை கொடுத்ததாக மோனிஷா, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், போலீசாரின் விசாரணையில், இவர்கள் அடிக்கடி சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசி இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த அந்த சமயத்தில் மொட்டை கிருஷ்ணன் மற்றும் மோனிஷாவிற்கு இடையில் என்ன மாதிரியான உரையாடல்கள் நடந்தது? 75 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததற்கான காரணம் என்ன? குறிப்பிட்ட அந்த பணத்தை வைத்து மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கொடுத்துள்ளாரா? என்கிற பல்வேறு கோணங்களில் தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த வழக்கின் போக்கு சற்று மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.