“அரவக்குறிச்சி மட்டுமல்ல எங்கு நின்றாலும் வாங்குவது முட்டையாக இருக்க வேண்டும்,” இனி தேர்தல் களம் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவே கூடாது என்று, கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி பேசினார்.
கரூர் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முதல்வர் மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து தமிழை காத்து வருகிறார். நிதி பகிர்வில் பாரபட்சம் எந்த சமரசத்திற்கும் முதல்வரிடம் இடமில்லை. நாங்கள் கட்டுன வரியை திருப்பிக் கொடு, 1 ரூபாய் கட்டினால் 29 பைசா திருப்பிக் கொடுக்க வேண்டும். எங்களிடம் வசூல் செய்து உத்திரப் பிரதேசத்திற்கு கொடுக்கராங்க. இது எங்கள் உழைப்பு. எங்கள் வியர்வை, எங்கள் இரத்தம். எங்களுக்கு கொடுக்க வேண்டியதை மற்றவர்களுக்கு கொடுக்கறீர்கள். எங்கள் உரிமையை மீட்டு எடுப்போம் என்று சூளுரைத்து, எந்த சமரசத்திற்கும் இடமில்லாமல் தமிழகத்தை பாதுகாத்து வருகிறார் முதல்வர்.
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் சில மாநிலங்களில் சில எண்ணிக்கைகளை குறைத்து, டெல்லியில் நம் குரல் ஒழிக்க கூடாது என்று குறுகிய மனப்பான்மையுடன் சூழ்ச்சி செய்கிறது. இந்தியாவில் இருக்கக் கூடிய முதல்வர்கள் எல்லாம் முன்னெடுப்பதற்கு முன்பாக இந்தியாவில் இருக்கக் கூடிய அரசியல் தலைவர்களை ஒன்றிணைத்து முதல்வர் முன்னெடுத்து இருக்கின்ற தமிழ்நாட்டை மீட்டு எடுக்கின்ற முதல்வர் நல்லாட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள், சில பேர் சமரசம் செய்து கொள்கிறார்கள், சில பேர் அமைதியாக இருந்து கொள்கிறார்கள், ஆனால், நம் முதல்வர் இந்தியாவில் ஒரு ஆளுமை மிக்க தலைவராக, நெஞ்சுரம் மிக்க தலைவராக இருக்கிறார். இந்த 3 நிலைகளிலும் எதிர்கின்ற நம் முதலமைச்சருக்கு நம் கரூர் தொகுதி மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், அரவக்குறிச்சி மட்டுமல்ல எங்கு நின்றாலும் வாங்குவது முட்டையாக இருக்க வேண்டும், இனி தேர்தல் களம் என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவே கூடாது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவன் குறிப்பிட்டார்.