பெண்ணோ அல்லது ஆணோ தனக்கு வரப்போகும் துணை அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று தான். இருப்பினும், ஒரு உறவில் அழகு மட்டுமே முக்கியம் என்று நினைப்பது முட்டாள் தனம். ஏனென்றால், அழகு என்பது ஒரு குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே.
ஆனால், ஒரு உறவு நீண்ட காலம் தொடர வேண்டுமென்றால், ஆதரவு, நம்பிக்கை, புரிதல் போன்ற மற்ற விஷங்களும் மிக முக்கியம். அழகு மங்கினாலும், இம்மாதிரியான விஷயங்கள் எந்த காலத்திலும் மங்கிப்போகாது. இவை தான் உறவில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள அன்பு, அக்கறை, பாசம் மற்றும் ஈர்ப்பை அதிகரிக்கும் இன்றியமையாத தூண்களாக இருக்கின்றன.
முதல் பார்வையிலே ஒருவருடைய கேரக்டர் இப்படி தான் இருக்கும் என்று கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள முடியாது. அந்த மாதிரியான நேரத்தில் அழகும் தோற்றமும் தான் அவர்களை ஈர்க்கச் செய்கின்றன. என்னதான் அழகு முக்கியமானதாக இருந்தாலும், மற்ற சில முக்கிய விஷயங்களுக்கும் முக்கியத்தும் அளிக்க வேண்டும்.
நம்பிக்கை
உங்களுடைய துணையை நீங்க எவ்வளவு நேசிக்கிறீர்களோ அதைவிட அவர்களை எந்த அளவிற்கு நம்புகிறீர்கள் என்பதே ரொம்ப முக்கியமான விஷயம். நம்பிக்கை மட்டும் இல்லை என்றால், என்ன தான் நேசித்தும் ஒரு பயனும் கிடையாது, நிச்சயம் உங்களால் நீண்ட நாட்களுக்கு ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது. எனவே, முதலில் உங்க துணையின் மீது நம்பிக்கை வையுங்கள். நேசம், பாசம் அனைத்தும் தானவே அதிகரித்துவிடும்.
ஆதரவு
எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து பாருங்கள். வாழ்க்கையின் கடினமான பயணங்களும் எளிமையாக மாறிவிடும். ஒவ்வொருவரும் தன்னுடைய துணையிடம் எதிர்பார்ப்பதும் ஆதரவை தான். சின்ன விஷயமோ பெரிய விஷயமோ உங்க துணைக்கு நீங்க ஆதரவாக இருந்தாலே அதுவே அவருக்கு பெரிய பலம்.
புரிதல்
ஒரு ரிலேஷன்ஷிப்பில் அடிக்கடி சண்டை, வாக்கு வாதம் ஏற்பட முக்கிய காரணமே புரிதல் இல்லாதது தான். கடைசியில் இதுவே விவாகரத்து, பிரிவிணையில் கொண்டு நிறுத்துவிடுகிறது. இருப்பினும், ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொண்டாலே பாதி பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிவிடலாம். எனவே, எந்தவொரு விஷயமாக இருந்தாலும் சரி துணையின் கருத்துக்களையும் காதுக் கொடுத்து கேளுங்கள். அவர்களுடைய உணர்வையும் புரிந்துக் கொள்ளுங்கள்.
நேர்மை
காதலோ, திருமணமோ எதுவாக இருந்தாலும் சரி, ரிலேஷன்ஷிப் என்று வந்துவிட்டால் நேர்மை மிக மிக முக்கியம். ஏனென்றால், இன்றைக்கு நீங்க சொல்லும் பொய்களே, பிற்காலத்தில் உங்களுடைய பிரிவுக்கு ஆப்பாக திரும்பிவிடும். எனவே, எதுவாக இருந்தாலும் சரி வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருங்கள். அதுவே இருவருக்கும் இடையேயான அன்பை பலமடங்கு அதிகரிக்கும்.