பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சொன்ன கருத்துக்களை தற்போது பார்க்கலாம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் மணிப்பூருக்கு நடப்பது தான் நமக்கும் நடக்கும். தொகுதிகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல; நமது அதிகாரம். சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இந்த மறுவரையறை நம்மை மாற்றி விடும். இது எண்ணிக்கை பற்றியதல்ல, அதிகாரம் பற்றியது. நியாயமான மறுசீரமைப்பு அமையும் வரை நாம் ஒன்றிணைந்து போராடுவோம்.” என்று, தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
பினராயி விஜயன், கேரளா முதலமைச்சர்
“இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் இது. பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்” என்று, தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.
ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர்
“பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் இது. கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை. தென் மாநிலங்களின் குரலை மொத்த இந்தியாவும் கேட்கட்டும்” என்று, தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
பகவந்த் மான், பஞ்சாப் முதலமைச்சர்
அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பை எடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி. விகிதாசார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், பஞ்சாப்பிலும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆம் ஆத்மி 100% ஒத்துழைப்பு வழங்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது” என்று, தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் பேசி உள்ளார்.
டி.கே.சிவக்குமார், கர்நாடகா துணை முதலமைச்சர்.
“கூட்டாட்சியை சிதைக்கின்றனர். தொகுதி மறுசீரமைப்பு என்பது அரசியல் தாக்குதல். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது கூட்டு நடவடிக்கைக் குழு. ஒன்றாக போராடுவோம்… ஒன்றாக உழைப்போம்..” என்று, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர்
7 மாநிலங்கள் 44 இடங்களை இழக்கக்கூடும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு நமக்கு தந்த பரிசுதான் தொகுதி மறுசீரமைப்பு” –
நவீன் பட்நாயக், ஒடிசா முன்னாள் முதலமைச்சர்
“மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம். பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் உறுதி செய்வதற்கான கூட்டம் இது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது” என்று, ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி மூலமாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் உரையாற்றினார்.
கே.டி.ராமராவ், தெலுங்கனா பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர்
“கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்று, தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் பேசி உள்ளார்.
இதனிடையே, அடுத்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.