“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தவெக கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக” அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
“தமிழகத்தின் மாநில உரிமைகளை பறிக்கும் அல்லது மாநில கொள்கைக்கு எதிரான முக்கிய பிரச்சினைகளின் போதும், அதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதித்து, அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறுவது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாக இருக்கிறது.
அந்த வகையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வரும் தொகுதி மறு வரையறை மற்றும் புதிய கல்வி கொள்கை பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அரசியல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ஆலோசித்து வரும் நிலையில், மாநிலத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், “தமிழ்நாட்டின் உரிமைக்காக, அரசியல் கட்சிகள் கௌரவம் பார்க்காமல் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னதாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் தான், கடந்த வருடம் அரசியல் கட்சி ஆரம்பித்து ஓராண்ட்டை கடந்திருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும், இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக ஏற்கனவே விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இக்கூட்டத்தில் பங்கு பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டை முன் வைக்க உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.