தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டது தான் இந்தியா. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும். இந்திய ஜனநாயகத்தை காக்க ஒன்று கூடியுள்ளோம்” என்று பேசினார்.
மேலும், “தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குறிப்பாக, “மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்து வருகிறது. மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்றும், இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அத்துடன், “தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும், இது எண்ணிக்கை பற்றியதல்ல, அதிகாரத்தை பற்றியது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
முக்கியமாக, நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
அதன்படி, “இன்று கூட்டப்பட்டுள்ள குழுவுக்கு ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ எனப் பெயரிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
அத்துடன், அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுப்பதற்காக வல்லுனர் குழு அமைக்க வேண்டும் எனவும் முன்மொழிந்தார்.
இதனிடையே, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கிய நிலையில் முன்னதாக மற்ற மாநிலங்களில் இருந்து வருகை தந்த தலைவர்களுக்கான சிறப்பு பரிசு பெட்டகம், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
அதில், தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகியவை, அந்த பரிசு பெட்டகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.