பேய்-க்கும் பேய்-க்கும் சண்டை, அத ஊரே வேடிக்கை பார்க்குதாம்.. காஞ்சனா படத்தில் இடம்பெற்ற வசனம்.. அது கிட்டத்தட்ட இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது..
விஷயம் என்னன்னா?… பொதுவாக நமக்கு தெரிந்த விஷயமோ, தெரியாத விஷயமோ அதுபற்றிய அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணையத்தில் விக்கிபீடியாவில் சென்று தேடுவோம். (விக்கிபீடியா தகவல்களின் அடிப்படையில் ஒருவரையோ, ஒரு அமைப்பையோ எடைபோடக் கூடாது என்பதே என் திண்ணமான கருத்து.)
ஆன்லைன் என்சைக்ளோ பீடியா, அதுவே விக்கிபீடியா. 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி விக்கிபீடியா தனது சேவையை துவக்கியது. ஜிம்மி வேல்ஸ் மற்றும் லேரி சேங்கர் இதனை ஆரம்பித்தனர். “”இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனித அறிவின் கூட்டுத்தொகையை இலவசமாகப் பெறும் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.”” இதுதான் விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம். “தகவல்கள் அதுவும் இலவசமாக” என்று ஒற்றை வார்த்தையில் இதனை குறிப்பிடலாம்.
இப்படிப்பட்ட விக்கிப்பீடியாவில் நீங்கள் உங்களைப் பற்றிக் கூட ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதனை யார் வேண்டுமானாலும் மேம்படுத்தவும் முடியும். உலக அளவில் விக்கிப்பீடியாவை பயன்படுத்தும் 5-வது பெரிய நாடு இந்தியாவாகும். ஏறத்தாழ 78 கோடி பேர் இந்தியாவில் விக்கிப்பீடியாவை நாள்தோறும் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் தான் இந்தியாவின் புகழ்பெற்ற செய்தி முகமையான ANI பற்றியும் விக்கிப்பீடியாவில் ஒரு பக்கம் இருந்தது. (!) அதில் ANI எப்போது ஆரம்பிக்கப்பட்டது, என்ன வரலாறு என்று வரிசையாக தகவல்கள் இருந்தன. கூடவே “propaganda tool for the incumbent government.” நடப்பு ஆட்சியின் கொள்கை பரப்புக் கருவியாக ANI செயல்படுகிறது என்றும் ஒருவரி இடம்பெற்று இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும் அதில் குறிப்பிட்டு இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவின் நடுநிலைத்தன்மை குறித்து கவலைத் தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் கட்டுரைகளில் திருத்தம் செய்ய அனுமதித்தால் அவரவர் விருப்பத்திற்குரிய ஒன்றாக அது இருக்குமே தவிர, உண்மை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். உங்களுக்கு இந்தியாவில் வேலைசெய்ய விருப்பம் இல்லை என்றால் இங்கு இருக்காதீர்கள் என்று காட்டமுடன் கூறியிருந்தார்.
இதில் விளக்கம் அளித்திருந்த விக்கிப்பீடியா நிறுவனம், தாங்கள் கட்டுரைகளை எழுதுவதில்லை, திருத்துவதில்லை என்றும் பயனர்கள் தான் அதனை உருவாக்கி மேம்படுத்துவதாகவும் கூறியிருந்தது. நாங்கள் வெறும் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் தான் என்பது அதன் வாதம்.
ஆனால் தன்னார்வலர்களால் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது, தங்களால் அதில் திருத்தங்கள் செய்யமுடியவில்லை என்பதால் தான் 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளதாக ANI நிறுவனம் கூறியது.
இந்த வழக்கில் தான் விக்கிப்பீடியா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. 2019-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு கட்டுரைக்கு 2024-ல் வழக்குத் தொடுக்கப்பட்டு, 2025-ல் மேல்முறையீடு. மகிழ்ச்சி!
– க.அரவிந்த்குமார்