முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025” என்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளி தொழில் கொள்கை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அதற்கு ஒப்புதலும் அளித்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற அளவில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
விண்வெளி தொழில் கொள்கை என்றால் என்ன? இதன் நோக்கம் என்ன?.. அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பது, 10 ஆயிரம் பேருக்காவது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. தமிழ்நாட்டில் இருந்து விண்வெளித்துறைக்கு தகுதியான ஆட்களை உருவாக்குவது.. ஆகிய மூன்றும் இதன் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்தார். அதில் மூன்று முக்கிய அம்சங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
1. ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பாக எலான் மஸ்க் நிறுவனத்திற்கு இணையான ஒரு பணியை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் செய்து வருகிறது.
2. சிறு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
3. ஸ்பேஸ் பே என்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த இடத்தில் முதலீடுகள் வந்தால் அதற்கு சிறப்பு தொகுப்பு சலுகைகள் வழங்கப்படும்.
மேற்சொன்ன மூன்றும் தான் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள். ஏன் முக்கியம் என்றால் பின்வரும் செய்தியை இணைத்துப் பார்க்க வேண்டி இருப்பதால் தான்..
மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் இதேபோன்றதொரு விண்வெளிக் கொள்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றி உள்ளது. இந்தியாவில் விண்வெளித் துறையில் தனியார் செயல்பாடுகளையும், அத்துறையில் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் மேலும் ஊக்குவிக்க இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் என்ன?… விண்வெளித் துறை தாராளமயமாக்கப்பட்டு, தனியார் துறை முழுமையான விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் அரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும், அங்கீகரிப்பதற்கும், மேற்பார்வையிடுவதற்கும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம் (IN-SPACe) உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறைக்கு ஆதரவளிப்பதற்காக 1,000 கோடி ரூபாய் துணிகர மூலதன நிதியத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருபக்கம் இந்திய விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல். அதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. மறுபுறம் தமிழக அரசின் சார்பில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல். நல்லது தானே? என்று தோன்றலாம். யாருக்கு நல்லது என்ற சந்தேகம் தான் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளால் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது என்ற கொள்கை முடிவு எடுப்பதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் VAANAM space tech accelerator என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் சகோதரர் ஹரிஹரன் இணைநிறுவனராக கொண்டு வானம் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்கள் சிலவற்றை தயாரித்துள்ள சமீர் பரத்ராம், விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர். ஆலோசனைக் குழுவில் சபரீசன், தொழிலதிபர் ரவி மரிவாலா, நடிகர் மாதவன், அக்னிகுல் நிறுவனத்தின் ஈஸ் சுந்தரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் நோக்கம் என்ன?.. “விண்வெளித்துறை என்றால் வெறுமனே ராக்கெட் விடுவது மட்டுமல்ல” என்று இதன் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், புத்தொழில் நிறுவனங்கள் விண்வெளித்துறையில் முயற்சிகள் மேற்கொண்டால் அதற்கு பக்கபலமாக வானம் அமைப்பு செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியவற்றை இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. முதல் பாயிண்ட் என்ன? எலான் மஸ்க் நிறுவனத்திற்கு இணையான ஒரு பணியை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் செய்து வருகிறது என்று கூறியுள்ளார். அது எந்த நிறுவனம்? அதன் பெயர் என்ன? ஏன் அமைச்சரவைக் கூட்ட முடிவு தொடர்பான அறிவிப்பில் “ஒரு நிறுவனம் இருக்கிறது” என்று அழுத்திப் பேச வேண்டும்..
இரண்டாவது பாயிண்ட். சிறு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு விண்வெளிக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். வானம் நிறுவனம், புத்தொழில் நிறுவனங்களுக்கு பக்கபலமாக செயல்படும் என்று கூறுகிறது. அப்படியானால் தமிழக அரசை நாடப்போகும் விண்வெளித்துறை தொடர்பான புத்தொழில் நிறுவனங்கள் எல்லாமே வானம் அமைப்பு அடையாளம் காட்டப்போகும் நிறுவனங்களா? என்ற கேள்வி எழுகிறது.
மூன்றாவது பாயிண்ட் .. ஸ்பேஸ் பே என்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த இடத்தில் முதலீடுகள் வந்தால் அதற்கும் சிறப்பு தொகுப்பு சலுகைகள் வழங்கப்படும். தென்தமிழ்நாட்டில் குலசேரகபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முன்னும்பின்னுமாக ஸ்பேஸ் பே என்ற பகுதிகள் தமிழக அரசால் அடையாளம் காட்டப்படும் என்று வைத்துக் கொள்வோம். அதில் எந்தெந்த புத்தொழில் நிறுவனங்கள் 300 கோடி ரூபாய் மற்றும் அதற்குமேல் முதலீடு செய்ய முன்வரும். வானம் அமைப்பு மட்டுமே இந்த அளவுக்கான முதலீட்டை புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வல்லமை பெற்றது. அப்படியானால் அந்த நிலங்களை கையாளும் உரிமை மற்றும் அரசின் சலுகைகளை பெறும் உரிமை ஆகியவையும் வானம் அமைப்பிற்கே செல்லும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தமிழ்நாடு அடிப்படையில் ஒரு தொழில்துறை மாநிலமாக மாறி வெகுகாலமாகிறது. யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். ஆனால், உண்மையான பயனாளிகள் யார் என்பது முக்கியமான ஒன்று. மத்திய-மாநில அரசுகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும், அதன் கொள்கை முடிவுகளை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பும் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. அத்தகைய வாய்ப்பு வானம் நிறுவனர்களுக்கு இருக்கிறது. பங்குச்சந்தையில் INSIDE TRADING என்று சொல்வார்கள். அவ்வாறு இல்லாமல், புத்தொழில்களை உண்மையிலேயே ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்வெளித்துறையில் தடம் பதிக்கவும், தமிழ் குடும்பங்கள் பயன்பெறவும் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்பட்டால் வரவேற்கத்தக்கதே.
மாறாக, எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல் தமிழக அரசின் விண்வெளிக் கொள்கையால், வானம் நிறுவனம் ஆதாயம் அடைந்தால்… ஒரே ஒரு நிறுவனம் பலன்பெற ஒரு மாநிலத்திற்கே கொள்கை வகுப்பதா? என்ற கேள்வி கண்ணகி மூட்டிய பெருந்தீயாய் அவர்கள் முன் எழுந்து நிற்கும்.
– க.அரவிந்த்குமார்