Tue. Jul 1st, 2025

‘மாவோயிஸ்டுகள் கொலை’ தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? – ராஜசங்கீதன்

கடந்த சில மாதங்களாக நாம் கடந்து – மறந்து போகும் மிக வழக்கமான செய்தி, ‘மாவோயிஸ்டுகள் கொலை’ என்கிற செய்தி. பார்த்திருந்தாலும் எவரையும் உறைத்திராத அச்செய்தியைப் பற்றிய ஒரு நல்ல கட்டுரை ஃப்ரண்டலைன் பத்திரிகையில் வந்திருக்கிறது. அதை மொழிபெயர்த்திருக்கிறேன்..

போலியோ நோயை ஒழிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் 1988ம் ஆண்டில் உறுதி பூண்டது. ஆனால் அதற்கான காலக்கெடுவென எதையும் நிர்ணயிக்கவில்லை. ஏனெனில் கெடு வைத்து ஒழிப்பது என்பது சாத்தியமற்ற விஷயம். சில விஷயங்களை பொறுமை, பரிவு, சாத்தியங்கள் போன்றவற்றை சார்ந்துதான் கையாள முடியும். கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகி விட்டது. போலியோ நோய் 99 சதவிகிதம் நாட்டில் இல்லை என்றாலும் முற்றாக இன்னும் அது ஒழிக்கப்படவில்லை.

ஆனால் மனிதர்களும் வறுமையும் சுரண்டலும் ஆக்கிரமிப்பு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வாழ்வாதாரப் பறிப்பும் பழங்குடியின் மதிப்பும் எனப் பல விஷயங்களுடன் தொடர்பு கொண்ட மாவோயிசம் என்கிற பிரச்சினையை ஒழித்துக் கட்டி விடுவோமென உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு நிர்ணயித்திருக்கிறார். ”மார்ச் 31, 2026-க்குள் நக்ஸல்கள் இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும்,” என அறிவித்திருக்கிறார். இந்த இலக்கின் தன்மை பயங்கரமானதாக இருக்கிறது. அந்நியமாதல் பிரச்சினைக்கான தீர்வாக அந்நியமானவர்களை ஒழித்துக் கட்டுவதை இந்த இலக்கு முன் வைக்கிறது.

பாதுகாப்பு படைகள் இந்தக் கெடுவை எட்ட முனைப்புடன் செயல்படுகின்றன. அன்றாடம் 17, 22, 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன. தொலைதூர நவீன ஆயுதங்களால் இலக்காக்கப்பட்ட பழங்குடி கிராமவாசிகள்தான் இந்த எண்ணிக்கையில் பெரும்பான்மை. மாவோயிஸ்ட் யார் என்பதை இந்த ஆயுதங்கள் எப்படி முடிவு செய்யும்? ஹெலிகாப்டரிலிருந்து போடப்படும் குண்டு, மாவோயிஸ்ட் மீது மட்டும்தான் விழுமா என்ன? மாவோயிஸ்ட் பார்க்க எப்படி இருப்பார்? யாருக்கும் தெரியாது. பழங்குடிகளை ஆதரிப்பதோ காரல் மார்க்ஸை படிப்பதோ நகரத்தில் உங்களுக்கு ‘அர்பன் நக்சல்’ என்கிற முத்திரையை தருமெனில், தன் நிலத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் ஒவ்வொரு பழங்குடியும் மாவோயிஸ்ட்தான். இத்தகைய அடையாளங்கள் எந்த ஆய்வுமின்றி குத்தப்படுகின்றன. விளைவாக, கைதுகள் நேர்கின்றன. தோட்டாக்களும் எந்த தடையுமின்றி பறக்கின்றன.

கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இக்கொலைகளுக்கு என சன்மானம் கூட வழங்கப்படுகிறது. அமித் ஷாவின் அறிவிப்பு என்பது சொந்த மக்களை கொல்வதற்காக அரசு அறிவித்திருக்கும் போரை போலத்தான் இருக்கிறது.

இந்தப் போருக்கு என்ன காரணம்? ஏன் எல்லா அரசாங்கங்களும் பழங்குடி மக்கள் மீது கொடும் அடக்குமுறையை ஏவுகிறது? இந்த பழங்குடிகள் வாழும் மலைகளிலும் காடுகளிலும் இருக்கும் வளங்களுக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு இருக்கிறதா? 2005ம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஆட்சியின்போது, அரசின் உதவியோடு செயல்படும் கூலிப்படையான சல்வா ஜூடும் படை உருவாக்கப்பட்டது. இறுதியாக 2011-ல் அப்படை தடை செய்யப்பட்டது. அச்சமயத்தில் தண்டக்காரண்யா காடுகளில் தொழில்துறை திட்டங்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன.

தற்போது, எண்ணற்ற சுரங்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட காத்திருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் அமித் ஷா, ஆபரேஷன் ககாரை அறிவித்திருக்கிறார். அரசாங்கம் காட்டும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் கூட, பெரிய நிறுவனங்களை ஈர்ப்பதற்குதான் முன் வைக்கப்படுகின்றன. சுரங்கம் அமைக்கப்படும் இடங்களுக்கு அருகே எல்லாம் பாதுகாப்பு முகாம்கள் தழும்பைப் போல நீண்டிருக்கிறது.

செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் தன் நினைவுக்குறிப்பில், “மக்களுக்கான உரிமைகளை வழங்கவென கொண்டு வரப்பட்ட வன உரிமை சட்டம், தொழிலாளர் சட்டங்கள், தலித், பழங்குடிகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் யாவும் முறையாகவும் முழுமையாகவும் அமலாக்கப்படுவதில்லை. ஆனால் அவை முழுமையாக அமல் செய்யப்பட வேண்டுமென மக்கள் போராடத் தொடங்கியதும், ‘சட்டம் ஒழுங்கு சீர்கேடு’ என அரசு உள்ளே குதித்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது. பெருநிறுவனங்கள் ஊழல் மற்றும் லஞ்சம் வழியாக வளங்களை பிரித்துக் கொள்ளப் போடும் அருவருப்பான போட்டிக்கு முன்னே, மனிதம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் உன்னதம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு விடுகிறது.

அமித் ஷா நிர்ணயித்திருக்கும் காலக்கெடு மற்றும் ராணுவ ரீதியிலான அணுகுமுறை, இந்த அரசாங்கத்தின் பொதுவான செயல்பாட்டை பிரதிபலிக்கிறது. வெளியுறவு உள்ளிட்ட விஷயங்களாக இருந்தாலும் புல்டோசர் பழிவாங்கல்களாக இருந்தாலும் இந்த அரசாங்கம், ஆண்மையத் திமிர்வாதத்தையும் கொடூரத்தையும்தான் கொண்டிருக்கிறது. பழங்குடி மக்களை அச்சுறுத்தி, தாமாகவே தங்களின் உரிமைகளை அவர்கள் தாரை வார்த்து, காணாமல் போய்விட வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதியது போல, “போராடுபவர்கள் போக்கிடமற்ற ஏழைகள்; அவர்களால் வேறெங்கும் செல்ல முடியாது.”

பின்குறிப்பு:

இக்கட்டுரையை புளகாங்கிதத்துடன் விதந்தோதி சிபிஐ(எம்) செல்வா பகிர்ந்திருக்கிறார். கேரளாவில் மாவோயிஸ்ட் அஜிதா யாரின் ஆட்சியில் கொல்லப்பட்டார் என்பதையும் அவரைப் போன்ற சிபிஐ(எம்)காரர்கள் நேர்மையாக (அப்படியொன்று இருந்தால்) விளக்கலாம். மாவோயிஸ்டுகள், மார்க்சிய லெனினிய இயக்கத் தோழர்கள் என சக அமைப்பு தோழர்களை கொன்றொழிக்கும் இடது சாரிய ’சகோதரப் படுகொலை’யை இந்த நாட்டில் கட்டவிழ்த்தவர்கள், பிற நாட்டு அமைப்புகளின் சகோதரப் படுகொலைகளை விமர்சிப்பதை போன்ற விநோதம் தான் இதுவும்.

– ராஜசங்கீதன்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *