தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு அரசியல் கட்சிகளுக்கான வியூகங்களை வகுப்பவர்கள் மற்றும் அதனை செயல்படுத்துபவர்கள் என்று பார்த்தால் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களோ அல்லது நிர்வாகிகளோ அல்ல. அவர்களுக்கான சமூக வலைதள பொறுப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்களே..
அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் உயரதிகாரியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று யுத்தகள விதிகளை பயன்படுத்துகின்றனர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக இவ்வாறாக எதிர்வினை புரிவதைக் கூட ஓர் எல்லை வரை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் சித்தாந்த ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக ஒத்த திசையில் பயணிப்பவர்கள் யார் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் எல்லாம் பெரிய கட்சிகளின் சமூகவலைதள அரசியல் பொறுப்பாளர்களாக அமர்ந்து கொண்டு அடிக்கும் லுச்சாத்தனத்திற்கு எல்லையில்லாமல் போய்விட்டது.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு குறித்த புரிதல் கிஞ்சித்தும் இல்லாமல், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் வாக்கரசியல் என்பதை மட்டுமே பிரதானமாக கொண்டு இந்த அரைவேக்காடுகள் செய்யும் செயல்களுக்கு விலை கொடுக்கப் போவது என்னவோ அரசியல் கட்சிகள் தான்..
நாளைக்கு இதே துண்டுபீடிகள் எல்லாம் வேறொரு அரசியல் கட்சியின் WAR ROOM-க்கு போய் கம்பு சுத்துவார்கள். மேல்மாடி காலியான அந்த அரசியல் கட்சிகளும் இவர்களை ஏதோ விண்வெளிக்குப் போய் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் போல சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பார்கள்.
ஆனால் இந்த சல்லிப்பயல்களிடம் போய் இடஒதுக்கீடு குறித்தோ, அரசியல் சாசனம் குறித்தோ, அவ்வளவு ஏன் தமிழ்நாட்டின் நிலவியல் என்ன? எந்தெந்த தேர்தல்களில் எந்தெந்த கட்சிகள் என்ன சொல்லி வாக்கு கேட்டன என்று கேட்டால் பெப்பே பெப்பே என்று முழிப்பார்கள்.
அரசியலில் அடிப்படை பாலபாடமே தனிமனித தாக்குதல் கூடாது என்பதுதான். அரசியல் கணக்குகள் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நேற்று கூறிய வார்த்தைகள் இன்று கூரிய கத்தியாக தலைக்கு மேல் தொங்கும் நிலை வரலாம். அதனால் கொள்கை ரீதியாக, சட்டத்தின் வாயிலாக ஒரு விஷயத்தை அணுகவேண்டுமே தவிர, சாட்ஜிபிடியின் பதில்களைப் போல எல்லாவற்றுக்கும் வாந்தி எடுத்து வைக்கக் கூடாது.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இயக்குநர் கோபி நயினார் விவகாரத்தில் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுபவர்கள் கூறும் சொற்களும், வெளிப்படுத்தும் விஷயங்களும் அருவருத்தக்க வகையில் உள்ளன.
அரசியல் சரித்தன்மை என்றொரு பதம் உண்டு. அது என்னவென இப்போது கூப்பாடு போடும் கூட்டங்கள் அறிவார்களா எனத் தெரியவில்லை.
உதாரணத்திற்கு நாம் தமிழர் கட்சியில் முன்னணியில் நின்று களமாடிய பல தம்பிகள் இன்று திமுகவில் உள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் இளம்தோழி ஒருவர் இப்போது திமுகவில். அதேபோன்று திமுகவின் முன்கள வீரர்களாக இருந்தவர்கள் அதிமுகவிலும், பாஜகவிலும் உள்ளதை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. இதேபோன்று பல கட்சிகளில் இருந்தவர்கள் காலவெள்ளத்தில் வேறொரு கட்சிகளில் நின்று நிலைபெற வேண்டிய தேவை உள்ளது.
எனவே தனிமனித விவகாரங்களை கையில் எடுத்து கொள்கை கோட்பாட்டுடன் இருப்பவர்களை அடித்து வீழ்த்த நினைப்பது மலினம். மண்டைக்குள் கடுகளவேனும் மூளை இருப்பவர்கள் சிந்தித்து செயல்படுவார்கள். முட்டிக்கு கீழே மூளை வைத்திருப்பவர்களிடம் அதனை எதிர்பார்க்க முடியாது….
– க.அரவிந்த்குமார்