“மண்ணின் மக்களுக்கே வேலை” கர்நாடக அமைச்சரிடமிருந்து பாடம் கற்க வேண்டும்!” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர், கி. வெங்கட்ராமன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு தனியார் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற சட்டமியற்ற முடிவு செய்து அறிவித்தது. தனியார் குழுமங்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தொழில் முனைவோரோடு கலந்து பேசி, அச்சட்டத்தை முன்னெடுப்போம் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து, தனியார் நிறுவன முதலாளிகள் எழுப்பிய எதிர்ப்புக்கு மறுமொழி அளித்து, கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் அளித்திருக்கும் விளக்கம் கவனங்கொள்ளத்தக்கது.
தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்காணலில், சந்தோஷ் லாட் கீழ்வருமாறு விளக்கம் அளித்தார்.
“எங்கள் மண்ணின் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளில் 50 விழுக்காடும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 70 விழுக்காடும் வேலை வாய்ப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று, நாங்கள் சட்டம் செய்ய முனைவது எங்கும் நடக்காத ஒன்றல்ல! எந்தத் தொழில் முனைவோரும் இங்கே இலாபம் கிடைக்கவில்லையென்றால், ஒரு நிமிடம் கூட தொழிலைத் தொடர மாட்டீர்கள். நாங்கள் கர்நாடக அரசின் சார்பில், உங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் அளிக்கிறோம். தண்ணீர் வழங்குகிறோம். சாலை வசதிகள் ஏற்படுத்தித் தருகிறோம். சலுகைக் கட்டணத்தில் நீண்டகால குத்தகைக்கு நிலம் வழங்குகிறோம். இவையெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிலிருந்து வழங்குகிறோம். அந்த மக்களுக்கு நாங்கள் பொறுப்பாக இருப்பது எப்படித் தவறாகும்? கன்னட இளையோருக்கு திறமே இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? திறன் தேவை என்பது ஒவ்வொரு நாளும் மாறி வருகிறது. எந்தத் தொழிலுக்கு என்னவகைத் திறன் தேவை என்பதை அந்தந்த தொழில் முனைவோர் தான் சொல்ல முடியும். அவ்வாறான திறன் மேம்பாட்டுக்கு அரசும் தொழில் முனைவோரும் இணைந்து பணி செய்வோம் வாருங்கள். எங்களுடைய சட்ட முன்வடிவிலேயே அதற்கான செய்திகளை சொல்லியிருக்கிறோம்.
தொழில் முனைவோர் உங்களுக்குள் நிதித் தொகுப்பை (Consortium) ஏற்படுத்துங்கள். அரசாங்கமும் நிதி கொடுக்கிறோம். இருவரும் இணைந்து திறன் ஊக்க மையங்களை (Incubation Centres) நிறுவுவோம். இதுதான் சரியான அணுகுமுறையாக இருக்குமே தவிர, மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதை தொழில் முனைவோர் முற்றிலும் எதிர்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.
எந்த மாநிலத்திற்குப் போனால், எந்த நாட்டிற்குப் போனாலும் இந்தக் கோரிக்கையை நீங்கள் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
எந்தத் தொழில் முனைவோரும் ‘தர்ம ஸ்தாபனம்’ நடத்தவில்லை. இலாபத்திற்குத் தான் தொழில் செய்கிறீர்கள். அதற்கு அரசாங்கம் உதவி செய்கிறது. அரசாங்கம் மக்களுக்குக் கடமைப்பட்டது. அதில், நிறுவனங்களுக்கும் பங்கிருக்கிறது. இரு தரப்பும் இணைந்து தான் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும். தொழில் முனைவோர்களோடு விவாதித்து எந்த வகையில் இதைச் செயல்படுத்தலாம் என முடிவு செய்ய கர்நாடக அரசு திறந்த மனதோடு இருக்கிறது.
அதிகத் திறன் தேவைப்படுகிற மேல்நிலை பதவிகளில் 50 விழுக்காடுதான் மண்ணின் மக்களுக்குக் கோருகிறோம். முழுவதையும் கேட்கவில்லை. அதேபோல் தான் மேலாளர் அல்லாத மற்ற பதவிகளுக்கு விழுக்காடு சொல்கிறோம். இதைக் கூட ஏற்க மறுப்பது சரியான அணுகுமுறை இல்லை. கலந்து பேசி நிறைவேற்றுவோம் வாருங்கள்!” என உறுதியாகவும், இணக்கமான முறையிலும் கன்னட மண்ணின் மக்களுக்காக அம்மாநில அமைச்சர் பேசுவதை கவனிக்க வேண்டும்.
கர்நாடகத்தின் சந்தோஷ் லாட் போல, தமிழ்நாட்டில் ஒரு அமைச்சராவது பேசுவாரா? அப்படிப் பேசத்தான் “திராவிட மாடல்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதித்து விடுவாரா? அதற்கு வாய்ப்பே இல்லை!
இதற்குக் காரணம், அம்மாநில மக்கள் தங்கள் வாழ்வுரிமையிலும், தாயக உரிமையிலும், மொழி உரிமையிலும் உறுதியாக இருப்பதே ஆகும்! கன்னடர்களின் நலனை முற்றிலும் பலி கொடுத்துவிட்டு, அங்கே ஒரு ஆட்சி நடக்கவே முடியாது! அவ்வாறான நிலையை, தமிழ்நாட்டு இளையோர் ஏற்படுத்தினாலே தவிர, எதுவும் நடக்காது.
ஏனென்றால், தமிழ்நாட்டின் “திராவிட” அரசியல், இந்த மண்ணையோ இனத்தையோ நேசிக்காத, எதையும் செய்து எப்படியும் பதவி பெறலாம், பணம் பிடிக்கலாம் என்ற உதிரித்தனமான பண்பாட்டின் ஊறிய கட்சிகளாகும்!
இக்கட்சித் தலைவர்களை தமிழ்நாட்டு நலன் பக்கம் திருப்புவதற்கு மக்கள் இயக்கங்கள் என் சாட்டை இருந்தால்தான் முடியும்! அதனைக் கட்டியெழுப்புவோம்! மண்ணின் உரிமைகளைப் பாதுகாப்போம்!” என்று, தனது அறிக்கையில் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தி உள்ளார்.