பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது தந்தைக்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் 23 வயது பெண்ணின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, “தான் உங்களது மகளை காதலிக்கிறேன், உங்களது பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையெனில் நானும் உங்களது மகளும் எடுத்துக் கொண்ட படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்” என்று கூறியுள்ளார். மேலும், அவரது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பெண்ணின் தந்தைக்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.
மேலும் அந்த மர்ம நபர், பெண்ணின் உறவுக்கார பெண்ணுக்கும், அப்பெண்ணின் ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட 23 வயது பெண்ணின் தாய் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் விசாரணையில், இளம்பெண், அமைந்தகரை பகுதியிலுள்ள திரையரங்கத்துடன் கூடிய வணிக வளாகத்திற்கு சென்றபோது, அங்கு காவலாளியாக வேலை செய்து வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மோசஸ் என்பவர் பழக்கமானதாகவும், பின்னர் மோசஸ் பணம் கேட்டு மிரட்டியதால் அப்பெண் மோசஸுடன் பேசாமல் தவிர்த்து வந்ததும், இதனால், ஆத்திரமடைந்த மோசஸ் மேற்டி பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து அப்பெண்ணின் தந்தைக்கும் உறவுக்கார பெண்ணுக்கும் அனுப்பி வைத்து மிரட்டியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மோசஸை கைது செய்த அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரிடமிருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.